சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை கூடுகிறJ. இந்த கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர முனைப்புடன் ஆயத்தமாகி வருகின்றனர். திமுக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், தற்போது ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்னும் பரப்புரையை தொடங்கி வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து திமுகவில் உறுப்பினர்களாக இணைத்து வருகின்றனர். இந்த பிரச்சாரம் வருகிற 15ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை மேலும் நீட்டிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட மிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. சென்னை அண்னா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருந்த அறிவிப்பில் , அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார்.