டெல்லி-NCR பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு, குடிமை அமைப்புகள், குடியிருப்பாளர்கள் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர்கள் இடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அரசு மற்றும் குருகிராம், நொய்டா மற்றும் காசியாபாத்தில் உள்ள நகராட்சி அமைப்புகள் அனைத்து பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை உடனடியாக அகற்றி தங்குமிடங்களில் தங்க வைக்க உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. விலங்குகளை மீண்டும் தெருக்களுக்குத் திருப்பி அனுப்பக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியது.
குடியிருப்பு நலச் சங்கங்கள் (RWAs) இந்த முடிவை பெருமளவில் வரவேற்றுள்ள நிலையில், இவ்வளவு பெரிய நடவடிக்கையை மேற்கொள்ள குடிமை நிறுவனங்களிடம் உள்கட்டமைப்பு அல்லது நிதி இல்லை என்று விலங்கு நலக் குழுக்கள் எச்சரிக்கின்றன.

கவனமாகக் கையாளப்படாவிட்டால், இந்த நடவடிக்கை மனிதர்கள் – நாய்கள் இடையிலான மோதலை மோசமாக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
டெல்லி மாநகராட்சி (MCD) கால்நடை சேவைத் துறையின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 648 என்பதும் நாய்களைப் பிடிக்க 24 வேன்கள் மட்டுமே வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நடத்தப்படும் 20 கருத்தடை மையங்கள் உள்ளன, அவற்றில் ஒரே நேரத்தில் சுமார் 4,000 நாய்களை மட்டுமே வைத்திருக்க முடியும். இந்த வசதிகளில் மாதந்தோறும் சுமார் 15,000 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது.
தலைநகர் பிராந்தியத்தில் உள்ள நொய்டா, ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களிலும் இதேபோன்ற நிலைதான் உள்ளது.
நொய்டாவில் ஒரே ஒரு தங்குமிடம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது, மேலும் மூன்று தங்குமிடங்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான நிலம் இறுதி செய்யப்படாமல் உள்ளது.
குருகிராம் பகுதியில் சுமார் 9,000 தெருநாய்கள் இருப்பதாகவும் அவற்றை தங்க வைக்க குறைந்த வசதி மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஃபரிதாபாத்தில் எந்தவொரு தங்குமிடமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் மட்டும் 8 முதல் 10 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் சுமார் 35,000 உள்ளன.
இவற்றை தங்கவைக்கத் தேவையான இடவசதியை போர்கால அடிப்படையில் மேற்கொண்டாலும் அவற்றை பராமரிக்க அதிக நிதி தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
கோ சாலைகளில் பராமரிக்கப்படும் பசு ஒன்றுக்கு நாளொன்றுக்கு ரூ. 40 செலவாகும் நிலையில் இதே அளவில் 8 லட்சம் தெருநாய்களுக்கும் செலவிடப்பட்டால் நாளொன்றுக்கு ரூ. 3.2 கோடியும் மாதத்திற்கு சுமார் 90 கோடி ரூபாயும் அதன் பராமரிப்பிற்காக செலவிட நேரிடும் என்று விலங்கு ஆர்வலர்கள் கணக்கிட்டுள்ளனர்.
தெருநாய்களுக்கு கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விடவும், ரேபிஸ் தாக்கிய வெறிபிடித்த நாய்களை மட்டுமே தங்குமிடங்களில் வைக்க உச்சநீதிமன்றம் 2023ம் ஆண்டு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து கருத்தடை மையங்களில் தங்க வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் தடாலடி உத்தரவுத்திட்டுள்ளதை அடுத்து அதற்கான உள்கட்டமைப்பு இன்றி டெல்லி நகர நிர்வாகம் திணறி வருகிறது.