தெருநாய் அச்சுறுத்தல் குறித்து உச்சநீதிமன்றம் நேற்று வழங்கிய உத்தரவு குறித்து விலங்கு உரிமை அமைப்புகள் கவலை எழுப்பியுள்ளன.
தெருக்களில் இருந்து நாய்களை தங்குமிடங்களுக்கு மாற்றும் நடைமுறை “சாத்தியமற்றது” மற்றும் “அறிவியல் ரீதியானது அல்ல” என்றும் கூறியுள்ளன.
முன்னாள் மத்திய அமைச்சரும் விலங்கு உரிமை ஆர்வலருமான மேனகா காந்தி, பல்லாயிரக்கணக்கான நாய்களை தங்க வைக்க டெல்லி அரசு 2,000 மையங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

“இந்தத் தீர்ப்பு பகுத்தறிவு சிந்தனை இல்லாதது போல் தெரிகிறது, மேலும் கோபத்திலிருந்து வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
அதேபோல் போதுமான நாய் தங்குமிடங்களை உருவாக்குவது “சாத்தியமற்றது” என்று PETA கூறியுள்ளது.
“சுமார் 10 லட்சம் நாய்களை தெருக்களில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றுவது பெரிய அளவில் அவற்றிற்கு துன்பத்தை ஏற்படுத்தும்” என்று பீட்டா இந்தியாவின் கால்நடை விவகாரங்களுக்கான மூத்த இயக்குநர் மினி அரவிந்தன் கூறினார்.

இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “டெல்லி-என்.சி.ஆரில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, பல தசாப்தங்களாக மனிதாபிமான, அறிவியல் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட கொள்கையிலிருந்து ஒரு படி பின்வாங்குவதாகும்.
இந்த குரலற்ற ஆன்மாக்கள் அழிக்கப்பட வேண்டிய “பிரச்சினைகள்” அல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு போன்ற எந்த மிருகவதையும் இல்லாமல் அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்” என்று கூறியுள்ள ராகுல் காந்தி, “பொது பாதுகாப்பும் விலங்கு நலனும் கைகோர்த்துச் செல்வதை நாம் உறுதி செய்ய முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.