சென்னை: நாடாளுமன்ற எம்.பி.க்களின் வசதிக்காக 5 படுக்கை அறைகளை கொண்ட விசாலமான மற்றும் அனைத்து வசதிகளுடன்  கட்டப்பட்டுள்ள 25 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி  இன்று பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் 184 எம்.பி.க்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

பாபா கரக் சிங் மார்க்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட 184 வகை-VII வகை பல அடுக்கு மாடி குடியிருப்புகளை பிரதமர் இன்று திறந்து வைத்தார்.

தலைநகர் டெல்லி,  பாபா கரக் சிங் மாா்கில் கட்டப்பட்டுள்ள  25 மாடி புதிய நவீன குடியிருப்புகளை பிரதமா் நரேந்திர மோடி  இன்று  காலை ( 11/08/25)  திறந்துவைத்தார். 4 தொகுப்புகளாக கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளுக்கு கிருஷ்ணா, கோதாவரி, கோஷி மற்றும் ஹுக்ளி என ஆறுகளின் பெயரிடப்பட்டுள்ளது. இதில் 184 எம்.பி.க்கள் வசிக்க முடியும்.

இந்த திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  “புதிய குடியிருப்புகளில் எம்பிக்கள் எந்தப் பிரச்னையும் எதிர்கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்களின் பணிகளில் அதிக கவனம் செலுத்த முடியும். இந்த குடியிருப்பில் 180க்கும் மேற்பட்ட எம்பிக்கள் ஒன்றாக வாழ்வார்கள் என்றவர், இதுவரை, எம்.பி.க்களுக்காக ஒதுக்கப்பட்ட  வாடகை கட்டடங்கள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கும் ரூ. 1,500 கோடி செலவாகி வந்தது.  இனிமேல் அந்த செலவுகள் இருக்காது. இதுபோன்ற  செலவுகளைக் குறைப்பதற்காக புதிய கட்டடங்களை கடந்த 2014ம் ஆண்டு  கட்டத் தொடங்குனோம்.  2014 முதல் இதுவரை  (2025 ஆகஸ்டு வரை) 350 எம்பிக்கள் குடியிருப்புகள் கட்டியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, குடியிருப்புக் கட்டடப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளார்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.  தொடர்ந்து அந்த வாளகத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிந்தூர் மரக்கன்று நட்டு திறந்து வைத்தார்

 இந்த அடுக்குமாடி கட்டிடத்தில், உள்ள வீடுகள்  184 எம்.பி.க்களுக்கு  ஒதுக்கப்பட்டு உள்ளன.   ஒவ்வொரு குடியிருப்பும், 5,000 சதுர அடி அளவுள்ளவை.  விசாலமாக காட்சி அளிக்கும் இந்த குடியிருப்பில்,  ஐந்து படுக்கை அறைகள் உள்ளன. மேலும்,  ஒரு பெரிய உணவருந்தும் வசதியுடன் கூடிய சமையலறை, விருந்தினா் உபசரிப்பு அறை, எம்.பி. முகாம் அலுவலக அறை, விருந்தினா் தங்கும் அறை  என ஏராளமான  வசதிகளைக் கொண்டுள்ளன. இது மட்டுமின்றி குடியிருப்பு வளாகத்தில்,  உடற்பயிற்சிக்கூடம், நடைப்பயிற்சிக்காக சிறிய வசதிகளுடன் கூடிய பூங்கா உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு  பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், குடியிருப்பின் கீழே  சுமாா் 200 வாகனங்களை வளாகத்தினுள்ளே நிறுத்தவும் கீழ்தளத்தில் சுமாா் 500 வாகனங்களை நிறுத்தும் வகையில் இங்கு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.