டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தரவுகளுடன் பேசிய ராகுல் காந்தி, காலம் மாறும், தவறு செய்யும் அதிகாரி கள் எங்களிடம் இருந்து தப்பிக்க முடியாது, , இனி உங்களை தொட விட மாட்டோம் என எச்சரித்துள்ளார்.

பீகாரில், இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு, காங்கிரஸ் உள்ளிட் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் சுமார் 65லட்சம் வாக்காளர்களை நீக்கி ஆகஸ்டு 1ந்தேதி டிராப்ட் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது. மேலும், விடுபட்டவர்கள் மீண்டும் தங்களது ஆதாரங்களை தாக்கல் செய்து பெயர் சேர்க்கலாம் என கூறி ஒரு மாதம் அவகாசம் வழங்கி உள்ளது. செப்டம்பர் 1ந்தேதி திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட இருப்பதாக அறிவித்து உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி நேற்று (ஆகஸ்டு 7ந்தேதி) பல தரவுகளை வெளியிட்டு,. தேர்தல் ஆணையம் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார், அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், வாக்கு திருட்டு என்பது வெறும் தேர்தல் மோசடி மட்டுமல்ல, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் என சாடியுள்ளார். மேலும், ஒரு நாள் எதிர்க்கட்சி, ஆளும் கட்சியாக மாறும் என்றும், அப்போது நீங்கள்(தேர்தல் ஆணைய அதிகாரிகள்) யாரும் தப்ப முடியாது என்றும் அதோடு, இந்தியாவின் தேசத் தந்தைகள் கட்டமைத்த அஸ்திவாரத்தை அசத்துப் பார்த்துள்ளீர்கள் என்றும், இனி உங்களை தொட விட மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் முழு விவரங்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ராகுல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதை செய்த ஒவ்வொரு தேர்தல் அதிகாரியும் பிடிபடுவார்கள் என்று கூறியுள்ள ராகுல், உயர் பதவியில் இருந்தாலும் சரி, கடைநிலையில் பணியாற்றினாலும் சரி, அவர்களை தண்டிப்பது நிச்சயம் என்று சூளுரைத்துள்ளார்.

ராகுல் வைத்த குற்றச்சாட்டுகள் விவரம்
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று விமர்சித்தார்.
பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளதாகவும், மென்பொருள் மூலம் ஆய்வு செய்யக்கூடிய வகையில் வாக்காளர் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பதாக வும் குற்றம்சாட்டினார்.
தேர்தல்கள் ஜோடிக்கப்படுவதாகவும், தேர்தல்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும், தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுவதாக வும் அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், நாட்டின் நலனுக்க எதிரான குற்றச் செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
பல தரவுகளுடன் பேசிய அவர், ஒரு நபருக்கு பல மாநிலங்களில் வாக்கு உள்ளதாகவும், கர்நாடகாவின் மஹாதேவபுரா பகுதியில், சுமார் 12,000 போலி வாக்குகள் பதிவாகி யுள்ளதாகவும், குறிப்பிட்டார். மேலும், கடந்த 2024-ம் ஆண்டு தேர்தலில், 25 தொகுதிகளில் வெறும் 33,000 வாக்குகளைவிட குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் பாஜக வெற்றி பெற்றதாக அவர் தெரிவித்தார். அதேபோல், பல்வேறு தொகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டிருப்பதும் தனது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், முதன் முறை வாக்காளர்களில் பெரும்பாலானோர் 18-20 வயது உடையவர்கள் இல்லை என்றும், 80 வயது நபர் ஒருவர் முதல் முறை வாக்காளர்களில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவருவதாக ராகுல் கூறியுள்ளார். அதேபோல், ஒரே விலாசத்தில் 45 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், சில வாக்காளர்களுக்கு புகைப்படங்களே இல்லை என்றும் குறிப்பிட்டார்.
வாக்காளர் பட்டியலில் கொடுக்கப்பட்ட முகவரியில் 40,009 பேர் இல்லை என்றும், ஒரே வாக்காளரின் பெயர் பல்வேறு வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ளதாகவும், பல வாக்காளர்களுக்கு தந்தை, தாய் பெயர்கள் இல்லை எனவும், பல வாக்காளர்களுக்கு புகைப்படங்கள் பதிவாகவில்லை என்றும், பதிவானவைகளும் அடையாளம் காணும்படி இல்லை எனவும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ராகுல். ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் இப்படியாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.