சென்னை: சென்னையில் தெருநாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில்,   தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை  சென்னை மாநகராட்சி (ஆகஸ்டு 9)  நாளை தொடங்கி உள்ளதாக அறிவித்து உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுயிகளில் தெரு நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்களை மட்டுமல்லாமல், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி துரத்தி கடிப்பது; இரவு நேரங்களில் தனியாக செல்லும் நபர்களை கடிப்பது என தெரு நாய்களால் பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. சிலர் நாய்கடியால் உயிரிழந்துள்ள சோகங்களும் அரங்கேறி உள்ளது.

இதனால் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில்,   நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் தினமும் 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது.

இதைடுத்து, தெருக்களுக்கே சென்று  தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி முழுவதும் 50 நாட்களில் 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி,  கால்நடை மருத்துவக்குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவர். நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்படும் நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படும்.  இந்த திட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி   தொடங்கப்படுகிறது.