திருவனந்தபுரம்: அமெரிக்கா 50% வரிவிதிப்பு இந்திய மக்களிடையே கடும் கோபத்தை எழுப்பி உள்ள நிலையில், இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அமெரிக்க நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளடன், இந்த விஷயத்தில் இந்திய அரசுக்கு ஆதரவாக தோள் கொடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் கடந்த சில வாரங்களாக இந்தியாவுக்கு எதிரான மனநிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவான மனநிலையில் செயலாற்றி வருகிறார். ஏற்கனவே பாகிஸ்தான்மீதான தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் என பல விஷயங்களில் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தவர், தற்போது ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்து அதிகார மோதலில் ஈடுபட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கை இது உலகளாவிய வர்த்தகக் கொள்கைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும். இதற்கு பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட தாங்கள் ஒன்றும் பாகிஸ்தான் இல்லை என்று கூறியதுடன் அமெரிக்கவின் விவசாய பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என பிரதமர் மோடியும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்கா நடவடிக்கை குறித்து விமர்சித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த விஷயத்தில், இந்திய அரசு நமது இறையாண்மையை நிலைநிறுத்த வேண்டும், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிய மறுக்க வேண்டும்” என்று பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்
இது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதன் மூலம் அமெரிக்கா மீண்டும் ஒருமுறை அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இது உலகளாவிய வர்த்தகக் கொள்கைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இது கேரளத்தின் ஏற்றுமதியாளர்களை, குறிப்பாக கடல் உணவு, மசாலாப் பொருட்கள், தேயிலை மற்றும் தேங்காய் நார் ஏற்றுமதியாளர்களை கடுமையாகப் பாதிக்கும். இதனால் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாழ்வாதாரங்கள் ஆபத்தில் இருக்கிறது. இது பன்முகத்தன்மை என்ற கருத்து மீதான தாக்குதலும் கூட.
அமெரிக்க அதிபரின் நடவடிக்கைக்கு நாம் வலிமையுடன் பதிலளிக்க வேண்டும், நமது இறையாண்மையை நிலைநிறுத்த வேண்டும், அழுத்தத்திற்கு அடிபணிய மறுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.