டெல்லி: நாடு முழுவதும் 4,08 கோடி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இணைப்பு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அளித்த பதிலில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது. தகுதியற்ற மற்றும் போலி ஆவனங்கள் மூலம் பெறப்பட்ட சிலிண்டர் இணைப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், உறுப்பினர் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்த பதிலில், சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு ரத்து செய்யப்பட்டுள்ள தகவல்களை வெளியிட்டார். இது தொடர்பாக, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நுகர்வோருக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்தும் வகையிலும், சேவையில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் வகையிலும் நாடு முழுவதும் எல்பிஜி விநியோக மையங்களில் ஐவிஆர்எஸ், எஸ்எம்எஸ் வாயிலாக சிலிண்டர் பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இம்முறையின் கீழ் சிலிண்டர் பதிவு, கட்டண ரசீது, சிலிண்டர் விநியோகம் குறித்த தகவல்களை குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் நுகர்வோர்கள் பெறுகின்றனர். இதன் மூலம் அவர்கள் தங்களுக்கான நடவடிக்கைகளை கண்காணித்து தவறு ஏதேனும் நிகழ்ந்தால் புகார் அளிக்க முடியும். 01.07.2025 வரை 4.08 கோடி எண்ணிக்கையிலான போலி எல்பிஜி இணைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டப் பயனாளிகளில் 67 சதவீதம் பேரின் பயோ மெட்ரிக் ஆதார் அங்கீகாரப்பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போது, உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் தி சுரேஷ் கோபி நாடு முழுவதும் 10.33 கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கும் நோக்கில் 2016 மே மாதத்தில் பிரதமரின் உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது. 2019 செப்டம்பர் மாதத்திற்குள் இத்திட்டத்தின் கீழ், 8 கோடி இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எஞ்சிய மற்ற வீடுகளுக்கும் இணைப்பை அளிக்கும் வகையில் மேலும் 1 கோடி சிலிண்டர் இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 2021 ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாம் கட்ட உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான இலக்கு 2022 ஜனவரி மாதத்தில் எட்டப்பட்டது. உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் மேலும் 60 லட்சம் இணைப்புகளை வழங்க அரசு முடிவு செய்தது. 2022 டிசம்பர் மாதத்தில் உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்டத்தின் 1.60 கோடி இணைப்புகள் என்ற இலக்கும் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இத்திட்டத்தின் கீழ், கூடுதலாக 75 லட்சம் இணைப்புகளை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இது 2024-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டது. 1.07.2025 நிலவரப்படி பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 10.33 கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என கூறினார்.
வீட்டு உபயோக எல்.பி.ஜி. சிலிண்டர் நுகர்வோர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் முறையாக எல்பிஜி விநியோகம் மற்றும் மானியங்கள் வழங்கப்படு வதை உறுதிசெய்யும் அடிப்படையில் அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பஹல் திட்டம், ஆதார் அடிப்படையிலான சரிபார்த்தல், பயோமெட்ரிக் அங்கீகாரம், தகுதியற்ற அல்லது போலி இணைப்புகளை நீக்குதல் உள்ளிட்ட முன்முயற்சிகளை அமல்படுத்துவதன் மூலமாக மானியங்கள் வழங்கப்படும் முறை சிறப்பாக வலுப்படுத்தப்பட்டுள்ளது.