நம்மளவில் வியப்பான கலைஞர்….

சிறப்பு கட்டுரை:

மூத்த பத்திகையாளர் ஏழுமலை வெங்கடேசன்…

ன் தந்தை திமுக அனுதாபி.. கலைஞர் காஞ்சிபுரம் வருகிறார் என்றால் காரில் செல்லும் வரை சிலவினாடிகள் தரிசிக்க நீண்ட நேரம் காத்திருப்பார்..

பெரும்பாலும் என் தந்தையின் கடை இருக்கும் பிரதான தெரு வழியாகத்தான் விஐபிக்கள் வருகை இருக்கும். இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி, விபி சிங் ஆகிய பிரதமர்களையும் நான் இங்கேதான் பார்த்திருக்கிறேன் .

கலைஞரை பார்க்க காத்திருந்தவரின் மகனான நான். வருடக்கணக்கில் தினமும் சர்வசாதாரணமாக அவரை நேரில் பார்ப்போம் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.

கலைஞர் அறிவாலயத்தில் கீழ்தளத்தில் வீற்றிருக்க மேல் தளத்தில் பல ஆண்டுகள் சன் டிவி செய்திகள் பிரிவில் முக்கியமான பணி என்பது எவ்வளவு வினோதம்?

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால். லட்சோப லட்சம் தொண்டர்கள் அவரைப் பார்க்கக் கூடிய துடிப்பார்கள். நாம் அவர் இருக்கும் பக்கத்தை கண்டாலே தலை தெறிக்க ஓடுவோம்.

காரணம் பின்னணியாக அமைந்தவை எல்லாமே வில்லங்கமான சம்பவங்கள் தான். நம்முடன் பணியாற்றிய சீனியர்களின் அனுபவங்கள் எல்லாம் வேற லெவல்.

அவருடைய நினைவாற்றல் எழுத்தாற்றல் துறைகள் மீதான அபரிதமான ஆழ்ந்த புரிதல் போன்றவை உலகறிந்த விஷயம். ஆனால் நமக்கு தனிப்பட்ட ரீதியில் நடந்த சிலவற்றை என்றுமே மறக்க முடியாது.

காலை 8 மணி செய்திக்கு நாம் பொறுப்பேற்றிருந்த நேரம். கலைஞர் எடிட்டோரியல் அறையை தொடர்பு கொள்ள முயற்சிக்க, போன் எங்கேயோ போய் இருக்கிறது. யாரோ ஒரு ஒருவர் மோகன் என்ற பெயரில் அவரிடம் சரியாக பதில் சொல்லாமல் போக, கடைசியாக செய்தி அறையை பிடித்து லைனில் வந்தார்.

‘’கொஞ்ச நேரம் முன்பு என்னிடம் போனில் பேசிய மோகன் யார் என்னவாக இருக்கிறார் என்பது எனக்கு இப்போதே தெரிந்தாக வேண்டும்’’ என்று கேட்டார். குரலில் அவ்வளவு கோபம்.

‘’ ஐயா உங்கள் போன் இப்போதுதான் மெயின் நியூஸ் எடிட்டோரியல் ரூமுக்கே வருகிறது. இங்கே மோகன் என்பவர் (நாம் வேலைக்கு வைத்து காஞ்சிபுரம் தம்பி) டிடிபி ஆபரேட்டர் ஆகத்தான் இருக்கிறார். அவர் கூட இப்போது ஷிப்டில் இல்லை வேறு யாரோ உங்களிடம் பேசி இருக்கிறார்கள்’’ என்று சொன்னோம்.

அவர் ஒத்துக் கொள்ளவே இல்லை. எப்படியோ,கொஞ்ச நேரத்தில் கோபம் தணிந்தது. பிரச்சனையை கைவிட்டுவிட்டார். கலைஞரிடம் சரியாக பதில் அளிக்காமல் அவரை கோபத்திற்கு ஆளாக்கிய அந்த மோகன் யார் என்பது கடைசிவரை தெரியவில்லை.

எல்லோரும் அப்போது கேமராமேன் மோகன்தாராவை ஒரு மார்க்கமாக பார்த்தனர். ஆனால் மோகன் தாராவோ அடப்பாவிகளா என் மேல ஏன்டா பழி போட பாக்கறீங்கன்னு கடுப்பாய் பார்க்க ஆரம்பித்தார்.
.
ஒருமுறை சனிக்கிழமை இரவு சித்தி சீரியலை எதிர்பார்த்து ஏன் இன்னும் சீரியலை போடவில்லை என்றார். நினைவாற்றல் மிக்க கலைஞரும் ஒரு குழந்தை மனநிலைக்குத் செல்வாரோ என்ற ஆச்சரியம்தான் மேலோங்கியது.

திமுகவின் மாநில அளவிலான போராட்டம். அது தொடர்பான செய்தியை ஷிப்ட் பொறுப்பாளர் என்ற முறையில் காலையில் நாம்தான் போட்டோம். அந்தச் செய்தியின் வரிகளும் விஷுவலும் விழுப்புரத்தில் நடத்திய பிரமாண்டமான போராட்டத்தில் முடியும்-

ஸ்கிரிப்டின் சில இடங்கள் கலைஞருக்கு திருப்தி யளிக்கவில்லைபோல. கோபத்தோடு போனில் வந்து பேச ஆரம்பித்ததும், விளக்கம் அளிக்க முற்பட்டோம். போலீஸ் ஸ்டேனில் மாட்டிக்கொண்ட விசாரணை கைதி போன்ற நிலைமை நமக்கு. வாயே திறக்க முடியவில்லை..

அது எவ்வளவு பெரிய துன்பியல் சம்பவமாக மாறிப்போய் எந்த உச்சத்தை எட்டி பின்னர் அடங்கியது என்பது அன்றைய ஷிப்ட் செய்தி தயாரிப்பாளர் Karthikeyan Devadoss போன்றவர்களுக்கு தெரியும்.

இதைவிட இன்னொரு சம்பவம், செய்தி அறைக்கு கலைஞரிடமிருந்து வந்தபோனை அலுவலக உதவியாளர் ஜெயக்குமார் எடுக்கிறார். அவரிடம் கோபமாய் செய்தி எழுதியவரை கூப்பிடுய்யா என்று சொல்லியிருக்கிறார்.

இங்கேதான் டுவிஸ்ட்டே. ஜெயக்குமாரோ, தவறுதலா ரீசிவரின் வாயை பொத்தாமல், எதிரே அமர்ந்திருந்த நம்மை பார்த்து சார் தலைவர் உங்களை கேக்கறாரு, இருக்கீங்கன்னு- சொல்லவா, இல்லை பாத்ரூம் போயிருக்கீங்கன்னு சொல்லவா அப்படின்னு நம்மிடம் கேட்டார்.

ரிசீவரில் இதை கலைஞர் நன்றாக கேட்டுவிட்டார். அப்புறமென்ன, போன் நம் கைக்கு வந்ததும், நமக்கு கும்பாபிஷேகம்தான்.

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

போனில் கலைஞர் வந்தாலே நமக்கு பேதிமருந்து தான்.. எவ்வளவு கவனமாக எழுதி பலபேர் சரிபார்த்தாலும் அதிலும் ஒரு தவற்றை கண்டுபிடித்து விளாசிவிடுவார் மனுஷன்.

அப்போது ஒன்றே ஒன்றுதான் தோன்றும், இந்த மனுஷனை நியூஸ் எடிட்டர் ராஜா சார் ரெகுலரா எப்படித்தான் டீல்பண்ணி சமாளிக்கிறாரோ? ஆனால் அந்த பேதி மருந்துதான் சன்டிவி எடிட்டோரியலில் செய்தியை கவனமாக வடிவமைப்பதில் உந்து சக்தியாக இருந்தபடியே முன்னுக்கு தள்ளியது.

எம்ஜிஆரை தலைவனாக ஏற்றுக் கொண்ட நாம் தனி மனித விருப்பு வெறுப்புகளை தள்ளிவைத்து விட்டு கற்க வேண்டிய நல்ல பாடங்களை எவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள தவறவில்லை.. கலைஞரிடமும் நிறைய கற்றோம். முதல்வர் என்று எழுதினால், எந்த பாலிடெக்கினிற்கு முதல்வர் என்று கேட்பார். முதலமைச்சர் என்று எழுதுங்கள் என்று சூடுபோடுவார். என சீனியர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம்.
..
கலைஞர் பல பட்டங்களால் மக்களால் சூட்டப்பட்டிருந்தாலும் நம்மை பொருத்தவரை ‘ஓய்வறியா சூரியன்’’ பட்டம்தான் மிகப்பொருத்தமானது. எந்த நிலையிலும் அவர் சோர்ந்துபோனது கிடையாது.

சூரிய உதயத்திற்கு முன்பே, கிட்டத்தட்ட பதினைந்து பேப்பர்களை படித்து முடித்திருப்பார். அவர் லைனில் வந்து ஏதாவது கேட்டால் பதில் சொல்லி யாகவேண்டுமே என்ற பயத்திலேயே எடிட்டோரியல் கோஷ்டிகளான நாங்களும் 18 பதினெட்டு பேப்பர்களை படித்து அலசி வைத்திருப்போம்.

கலைஞரை பொறுத்தவரை, வெற்றிகளை பெறமுடியாதபோது வாய்ப்புகளை இழந்திருக்கலாமே தவிர களத்தை அவர் இழந்ததேயில்லை..
.
உழைப்பு, போர்க்குணம், தன்னம்பிக்கை எழுத்தாற்றல், பேச்சாற்றல் நினைவுத்திறன், கற்பனைத்திறன், சாதுர்யம், ரசனை என கலைஞரிடம் கொட்டிக் கிடந்தவை ஏராளம்.

திருவாரூர் பக்கம் திருக்குவளை என்ற குக்கிராமத்தில் தொடங்கிய வாழ்க்கை, மாநில அரசியலை தாண்டி ஒட்டு மொத்த இந்திய அரசியலிலும் பல அத்தியாயங்களில் கதாநாயகனாக இருந்திருக்கிறது என்பது உண்மையிலேயே பிரமிப்பான விஷயம்.

சந்திரசேகர், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், போன்றேரெல்லாம் வகித்த பிரதமர் பதவி, எளிதாக கிடைக்கும் வாய்ப்பை அப்போதே பெற்றிருந்த தமிழர்கள் பட்டியலில் கலைஞருக்கு முக்கிய இடமுண்டு.

அகில இந்திய காங்கிரசுக்கு தலைமை வகித்த காமராஜர் பிரதமராகும் வாய்ப்பைபற்றி யோசிக்காமல் பிரதமர்களை உருவாக்கும் கிங் மேக்கர் என்ற பெயரோடு ஒதுங்கிப்போனார்

சுதந்திரம் வாங்கித்தந்த கட்சி என்ற பெயரோடு தேசம் முழுவதும் பலத்தோடு உலவிவந்த காங்கிரசை, முதன் முதலில் பிராந்திய அளவில் பெரும்பான்மை பலத்தோடு வீழ்த்தி மாநில ஆட்சியை கைப்பற்றியது அறிஞர் அண்ணா தலைமையிலான திமுகதான்.

1967ல் ஒட்டு மொத்த இந்தியாவும் திமுகவை திரும்பிப்பார்த்தபோது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய தேசிய கட்சிகளை தவிர்த்து காங்கிரசை எதிர்த்த மற்ற மாநில கட்சிகளுக்கெல்லாம் மானசீக தலைமைப்பீடமாக தமிழ்நாடும் திமுகவும்தான் இருந்தன.

ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோதே நாடாளுமன்றத்தில் பேச்சாற்றலால் கலக்கிய அறிஞர் அண்ணா, 1967ல் ஆட்சியை பிடித்த சொற்ப காலத்திலேயே துரதிஷ்டவசமாக இறந்துபோனார்.

69-ல் முதலமைச்சரான கலைஞர், மாநில அரசியலையும் ஆட்சியையும் மற்றவர்களிடம் விட்டுவிட்டு தேசிய அரசியலில் கவனம் செலுத்தியிருந்தால் நாட்டின் அத்தனை மாநில தலைவர்களும் அவர் பின்னால் திரண்டிருப்பார்கள்.

அவர்களை ஒருங்கிணைந்திருந்தாலே டெல்லி அரசியல் வரலாற்றின் முகமே மாறிப்போயிருக்கலாம்.
ஆனால் கலைஞர் அந்த முயற்சியை நினைத்துக்கூட பார்க்கவில்லை.

மனசாட்சி முரசொலி மாறனை டெல்லியில் வலுவான லாபிக்கு அனுப்பிவிட்டு மாநில அரசியலே போதும் என்று இருந்துவிட்டார், காங்கிரசுடன் நட்பு பாராட்ட ஆரம்பித்து பிரதமர் இந்திரா காந்தியின் நட்பு வளையத்துக்குள்ளும் போனார்.

முதலமைச்சர் கலைஞர் என்றாகி இந்த கட்டத்திற்கெல்லாம் நுழைவதற்கு முன் அவரின் வாழ்க்கையின் பக்கங்களை புரட்ட புரட்ட ஆச்சர்ய குறிகள்தான்.

1924 ல்பிறந்த கலைஞர், செல்வசித்ரா என்ற சரித்திர கதையை கையெழுத்து பிரதியாக படைத்தபோதும், இந்தி திணிப்பை எதிர்த்து போராடியபோதும் ஒரே வயதுதான். ஆம் வெறும் பதிமூன்றே வயது… அப்போது துளிர் விட்டஎழுத்தாற்றல் பதினைட்டை நெருங்கும்போது சும்மா இருக்குமா?

முரசொலி என்ற மாதாந்திர பத்திரிகையையே ஆரம்பித்தது. பின்னாளில் மாபெரும் தலைவராக வளர்ந்துவிட்டு நிலையில் கலைஞரை சுற்றியிருப்பவர்களிடமும் சரி, கலைஞரிடமே கேட்டாலும் சரி, அவரின் உண்மையான முதல் மனைவி முரசொலிதான் என்பார்கள்.

அந்த அளவுக்கு அவர், தன் மனதில் தோன்றியவற்றை பேனாவில் ரத்தத்தை ஊற்றி எழுதாத குறையாய் முரசொலியில் எழுத்துக்களாய் வடித்தார்.

அதே பதினெட்டுவயதில்தான் அரசியல் ஆசான் அறிஞர் அண்ணாவையும் அவர் முதன் முதலாய் சந்தித்தார். அண்ணாவின் திராவிட நாடு பத்திரிகையில் இளமைப்பலி என்ற கலைஞரின் கட்டுரை இடம்பெற்றதே இந்த சந்திப்புக்கு முக்கிய காரணமாய் அமைந்திருந்தது..

அண்ணாவுடன் கலைஞரும் சேர்ந்து பெரியாரை தலைவராக ஏற்றார்கள். நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறியபின் அண்ணா பேச்சாற்றலில் மின்ன ஆரம்பித்தார்., கலைஞருக்கோ அரசியலையும் தாண்டி திரையுலகின் மீது ஒரு கண் விழுந்தபடியே இருந்தது. சில ஆண்டுகளிலேயே அது வசப்பட்டும் போனது.

11 ஆண்டுகள் திரையுலகில் போராடிய எம்ஜிஆர் கதாநாயகனாக நடிக்க முயன்று சில படங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டன. அத்தகைய பின்னணியில் முதன் முதலாய் கதாநாயகனாக நடித்த படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. முழுவசனமும் கலைஞருடையதே.

ஆனால் படத்தின் டைட்டிலில் பெயர் கொடுக்க சிலருக்கு மனம் வரவில்லை..கதை, திரைக்கதை, வசனம், டைரக்சன் ஏ.எஸ்.ஏ சாமி என்றே தயாரானது.. ஆனால் உண்மை யான வசனகர்த்தாவின் திறமைகள் பற்றி படக்குழுவின் லேசாக முணுமுணுத்தபோதுதான் தடைக்கற்கள் யோசிக்க ஆரம்பித்தன..

பொதுவாக ஒரு படத்தின் டைட்டிலில் கடைசியாக இயக்குநர் பெயரைத்தான் போடுவார்கள்.. ஆனால் ராஜகுமாரி படத்திலோ, , இயக்குநர் பெயரை போட்டு விட்டு அதன்பிறகு கடைசியாக கலைஞரின் பெயரை உதவி ஆசிரியர் என்றும் உதவி டைரக்சன் சி.கே.ராமசாமி என்பவரின் பெயரையும் காண்பித்தார்கள்.

கலைஞரின் பேனா திரையில் முதன்முதலாய் சீறியது தேசப்பிதா காந்தியடிக்களுக்கு எதிராகத்தான். ஆரம்பகாட்சியிலேயே மன்னன் வாயிலாக ராமராஜ்யத்தை லைட்டா பதம் பார்த்திருப்பார்.

ராஜகுமாரியை தயாரித்த அதே ஜுபிடர் பிக்சர் அபிமன்யு படத்தையும் தயாரித்தது. எம்ஜிஆர் அர்ஜுனனாக நடித்த படம் கடைசி 20 நிமிடங்கள்தான் வருவார். வசனங்கள் அனல் பறக்கும், ஆனால் டைட்டிலில் கலைஞர் பெயர் மிஸ்ஸிங். வெறுத்துப்போன கலைஞர் ஜுபிடர் பிக்சர்ஸ்சை கைகழுவினார்

கலைஞர் வாழ்க்கையை அலசினால் 1947-1950 வரையிலான மூன்று ஆண்டு கால கட்டம் உண்மையில் பிரமிப்பானது,

ஒரு மனிதன் ஒரே நேரத்தில் எத்தனை போராட்டங்களை சந்தித்திருக்கிறான் என்பதை பார்க்கும்போது அடேங்கப்பா என்றே சொல்லத்தோன்றும்

மனைவி பத்மாவதி கொஞ்சநாள் மட்டுமே வாழ்த்து முத்து என்ற பிள்ளையை பெற்றுக்கொடுத்துவிட்டு மறைந்துவிட்டார்.

24 வயது இளைஞன் கையில் தாயில்லா மூன்று வயதுபிள்ளை

இன்னொரு பக்கம் உயிர்மூச்சான முரசொலி பத்திரிகை நடத்தி பெரும் கடன், இரண்டாவது திருமணம்,

சினிமாவில் வசனம் எழுதினால் பேர் போடாமல் மறைக்கிறார்கள்.

இதையெல்லாம்விட அதுநாள்வரை பயணித்த பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து தனிக்கட்சி கண்ட அண்ணாவுடன் தானும் வெளியேறவேண்டிய  நிலை…

– இத்தனை நெருக்கடி கலந்த திருப்பங்களையும் சமாளித்தார் கலைஞர். எம்ஏ பட்டதாரிகள் நிறைந்த திமுக தலைவர்களில், பெரிதும் படிக்காதவர்களில் ஒருவர் கலைஞர். ஆனால் எழுத்தும் பேச்சும் அவரை கைவிடவேயில்லை.

1950ல் எம்ஜிஆர் நடித்த மருதநாட்டு இளவரசியும் மாடர்ன் தியேட்டர்ஸ் மந்திரிகுமாரியும் மு.கருணாநிதி என்றால் வசனங்கள் எப்படி இருக்கும் என்பதை நிரூபித்தன.

பேரறிஞர் அண்ணாவுக்கு தொடர்ந்து வெற்றிக்கரமாய் வசப்படாமல் போன சினிமா, கலைஞருக்கு வெறும் 26 வயதிலேயே சுலபமாக வசப்பட்டது. ஓரே வரியில் சொன்னால், படத்துக்கு படம் துவம்சம் செய்யஆரம்பித்தார்.

வசனகர்த்தா உலகில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட இளங்கோவன் போன்ற நிறைந்த அரங்கில் கலைஞரும் தனக்கென ஒரு நாற்காலியை உறுதி செய்தார்.

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான குண்டல கேசியை ஒரு காலத்தில் நாடகமாக்கி ரேடியோவுக்கு அனுப்பியிருந்தார். இதெல்லாம் ஒரு நாடகமா என்று திருச்சி வானொலி நிலையம் திருப்பியடித்தது. அதையே மந்திரிகுமாரி என மாடர்ன் தியேட்டர்ஸ் மூலம் மந்திரிகுமாரியாக்கி,இன்றளவும் பேசப்படுகிற வெற்றிக்காவியமாக்கினார்.

எம்ஜிஆர் கதாநாயகன் என்றாலும் வில்லனாக வருகிற எஸ்ஏ நடராஜனுக்குத்தான் அந்த படத்தில் வசனங்கள் அதிகம்.

அரண்மனை நாயே அடக்குடா வாயை.. கொலையா அது, கலையப்பா, கலை… என படம்முழுவதும் வசனங்கள் தெறிக்கும்.. அந்த படத்தை கூர்ந்து கவனித்தால் பல விஷயங்களை சிரித்தபடியே நக்கல்பாணியில் தவிடுபொடியாக்கியிருப்பார் கலைஞர்..

எனக்காக காத்திருந்து காத்திருந்து சாமியார் ஆகிவிட்டீர்கள் போல என மன்னன் மகளாக வரும் காதலி, தளபதி வீரமோகனாய் இருக்கும் எம்ஜிஆரிடம் சொல்லுவார்.

அதற்கு எம்ஜிஆரின் அதகள பதில், ‘’நான் சாமியாராய் இருந்திருந்தால் நான் ஏன் உனக்காக காத்திருக்கப் போகிறேன்? உங்கப்பனிடம் சொல்லி உன்னை என்னிடத்திற்கே வரவழைத்திருக்கப்போகிறேன்’’

யோசித்துபாருங்கள் இந்த வசனத்துக்குள் பொதித்துள்ள விஷயங்களை, போலிச்சாமியார்களை நம்பும் மன்னர்கள், மடத்தனமாக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், மன்னர்களை ராஜகுரு என்ற போர்வையில் எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப்படைக்கலாம் என்பதை அப்படியொரு சாடலில் வெளிப்படுத்தியிருக்கும் கலைஞரின் பேனா.

அப்பேர்பட்ட மந்திரிகுமாரி படத்தையும் மாடர்ன் தியேட்டர்ஸ்சையும் நினைக்கும்போது, நமக்கு ஒரு நினைவு ஊஞ்சலாடுகிறது. மந்திரிகுமாரி அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போன்ற படங்களை தயாரித்த தென்னிந்திய ஜாம்பவான் டிஆர் சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோ சேலத்துக்கு மிகப்பெரிய அடையாளம், பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடம் அடுக்குமாடி குடியிருப்புகளாக உருவெடுத்தது.

சேலம் மக்கள் மட்டுமல்ல, தமிழ்சினிமா உலகமே வரலாற்று சின்னமாக பாவித்த மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில் இடிக்கப்படபோகிறது என ஒரு தகவலை சொன்னார் சேலம் சன்டிவி செய்தியாளரான ஆருயிர் நண்பர் எஸ்டி குமரேசன்..

நாம் பெரிதும் நேசிக்கும் எம்ஜிஆர், கலைஞர், கண்ணதாசன் இசையமைப்பாளர் ஜீ.கே. ராமநாதன் போன்றோர் காலடிகளை அடிக்கடி பார்த்து பெருமைப்பட்டுக்கொண்ட அந்த வாயிலா என மனம் பதறியது.

நேரம் பார்த்து சன்டிவியில் அதுதொடர்பான செய்தியை நல்லதொரு ஞாயிற்றுக்கிழமை காலையில் போட்டோம். கலைஞர் பார்த்தார். விளைவு, இன்றும் அந்த நுழைவுவாயில் உயிரோடு இருக்கிறது.

ஏற்காடு போகும்போது, நம்முடைய பெங்களுர் நண்பர் சிற்பி ராஜசேகரிடம் அதே வாயிலின் முன்பு வைத்து இதுபற்றி விவரித்தது மறக்க முடியாது..

மந்திரிகுமாரிக்கு பிந்தைய கலைஞரின் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கை, அது ஒரு விறுவிறுப்பான ரேஸ்…

கலைஞரின் முதல் நான்கு படங்களுமே எம்ஜிஆருடன்தான். அடுத்து கதை வசனம் எழுதிய படம், தேவகி., முற்போக்கு சிந்தனை கொண்ட கலைஞரின் பேனா எப்படி பால்ய விவாகத்தை தூக்கிப்பிடிக்க முடிந்தது என்பது வியப்பாகவே இருக்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தின் இமாலய வெற்றியை பற்றியோ அதற்கு காரணமான கலைஞரின் வசனங்கள் பற்றியோ, சொல்லித்தெரியவேண்டியதேயில்லை.

இதேபோல எம்ஜிஆரின் மலைக்கள்ளன், சிவாஜியின் மனோகரா போன்ற படங்கள் திரையில் வெற்றிகரமாய் பறந்து கோலேச்ச இரு பெரும் திலகங்களுக்கு நல்லதொரு சிம்மாசனத்தை அமைத்துத்தந்தது

50 களில் கலைஞர் ஒரு அரசியல்வாதியாகவும் தலைசிறந்த நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற வசனகர்த்தாவாகவும் இரட்டை குதிரையில் வெற்றிகரமாகவே வலம் வந்தார்.

அரசியலில் அதிரடி என்பது கலைஞருக்கு தண்ணீர் பட்ட பாடு. 1957ல் திமுக முதன் முதலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது கலைஞர் உட்பட 15 பேர் வெற்றிபெறுகிறார்கள். அடுத்து 1962ல் அதே 15 பேர் மீண்டும் போட்டியிட்டபோது கலைஞர் மட்டுமே வெற்றி பெறுகிறார். அறிஞர் அண்ணா உட்பட மற்ற 14 பேரும் தோற்றுப்போகிறார்கள்.

கலைஞரின் இந்த அதிரடிவேகம்தான், அவர் போட்டியிட்ட 13 சட்டமன்ற தேர்தல்களிலும் தோல்வியே காணாதவர் என்ற சரித்திரத்தை படைக்கவைத்தது.

43 வயதில் அமைச்சர் பதவி, 45 வயதில் முதலமைச்சர் பதவி என அவரின் அரசியல் ஏறுமுகம் உண்மையிலேயே வியப்பானது. அவர் எதிர்த்து அரசியல் புரிந்தது சாதாரண ஆட்களல்ல. பிரதமர் நேரு, ராஜாஜி, காமராஜ் என நாடறிந்த பெருந்தலைவர்களை.

பண்ணையார்கள் சிந்தனையில் இருந்த காங்கிரசுக்கு மாற்றாக அண்ணா தோற்றுவித்த திமுக எந்த வகையில் வித்தியாசமானது, அடித்தட்டு மக்களுக்கானது என்பது நன்றாக விளங்கும்படி கலைஞர் பார்த்துக்கொண்டார்.

பேருந்துகளை அரசுடமையாக்கியது, பொது விநியோகத்திட்டம், குடிசை மாற்று வாரியம், கண்ணொளித்திட்டம் எல்லாவற்றையும் விட பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்ற சமூக நீதி என ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லி சொல்லி அடித்தார்.

கலைஞரின் தொலைநோக்கு பார்வைக்கு ஒரு முக்கிய உதாரணம், சென்னை அண்ணாசாலையில் உள்ள மேம்பாலம். 1973ல் கட்டிமுடிக்கப்பட்ட அந்த பாலம் பொன்விழா காணும்போது, கலைஞர் நூற்றாண்டு விழா நடக்கும் என்பது எவ்வளவு வினோதமானது.

சென்னை கத்திப்பாராவின் அந்த அழகிய பாலமெல்லாம்கூட கலைஞரின் சிந்தனையால் நிஜவடிவம் பெற்றதுதான். தொழில் நுட்ப பூங்கா என சென்னை தரமணியில் டைடல் பார்க்கை கலைஞர் உருவாக்கிய விதத்தையும் பார்த்தால் அவருடைய தொலைநோக்கு பார்வை தெளிவாக புரியும்.

அதேபோல இனம், மொழி தொடர்பான அடையாளங்களை நிறுவுவதில் அதீத ஆர்வம் கொண்டவர் கலைஞர், சென்னை வள்ளுவர் கோட்டம், பூம்புகார், குமரியில் வானுயர்ந்த வள்ளுவன் சிலை என ஒரு பெரிய பட்டியலையே போடலாம்.

அதேநேரத்தில் மாநில சுயாட்சி என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று மற்ற மாநிலங்களுக்கு பாடம் நடத்தியவர் கலைஞர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் ஒரு தேசியக்கொடியை ஏற்றக்கூட அதிகாரம் இல்லாத நிலையில், சுதந்திர தினத்தின்போது அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்கள்தான் தேசிய கொடியே ஏற்றவேண்டும் என்ற உரிமையை 1974ல் பெற்றுத்தந்தவர் கலைஞர்.

1975ல் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தி ஜனநாயகத்தை குலைத்தபோது அதை எதிர்த்து போராடியவர்களுக்கு தைரியமாக தமிழகத்தில் தஞ்சம் தந்தவர் அவர்.

அதிகாரிகளை கேள்விகேட்டு மடக்கி நினைத்ததை சாதிப்பதில் கலைஞரின் சாமர்த்தியத்தை சொல்லிமாளாது.

அரசியலில் ஆசானுக்கு ஆசானாய் திகழ்ந்த் தந்தை பெரியார் இறந்தபோது அவருக்கு அரசு மரியாதை கொடுக்க அரசு விதிகளில் இடமில்லை அதிகாரிகள் சொன்னபோது, மகாத்மா காந்தி எந்த அரசு பதவியில் இருந்து செத்துப்போனார், அவருக்கு எப்படி அரசு மரியாதை கொடுக்கப்பட்டது. போய் ஏற்பாடு செய்யுங்கள் என்று உத்தரவிட்ட அதிரடி தலைவர் அவர்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் சரி, சுறுசுறுப்பில் கலைஞரை அடித்துகொள்ள ஆளே கிடையாது.. எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கி தொடர்ந்து வெற்றி பெற்றபோதும், தோல்விகளால் துவளாமல் கலைஞர் அசராமல் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்த விதம் அலாதியானது.

தேர்த்லில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், வாக்காளர்களுக்கு முதன் முதலில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை நடத்துவது திமுககாரனாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு உடன்பிறப்புகளை தொடர்ந்து இயங்கவைத்தவர் அவர்.

தேசிய தலைவர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு பெற்றிருந்த அவரால் விபி. சிங் போன்றவர்களை பிரதமராவே ஆக்கமுடிந்தது.
ஆனால், பிரதமர் பதவிக்கு ஆர்வம் காட்டுவீர்களா என்ற கேள்விக்கு என் உயரம் எனக்கு தெரியும் என்று சொல்லியும் ஆச்சர்யமூட்டினார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சாமன்ய மக்களுக்கு உரிய உரிமைகளையும் பங்குகளையும் வழங்கியதில் கலைஞர் ஆற்றிய சேவைகள் ஏராளம்.

முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கவும் அவர்களை நோக்கி வேலைவாய்ப்பு தேடிச்செல்லவும் அற்புதமாக வழிவகுத்தவர் கலைஞர்.

ஐந்து முறை முதலமைச்சர் பதவி வகித்த அவர், சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளவும் தவறவில்லை. இலங்கையில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த நேரத்தில் மத்திய அமைச்சரவையில் தன் வாரிசுகளுக்கு நல்ல துறையை ஒதுக்கும்படி ஆர்வம் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு இன்றளவும் சுழன்று சுழன்று அடித்துக்கொண்டிருக்கிறது.

ஒரே குடும்பத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், இரண்டு மத்திய அமைச்சர்கள், இன்னொரு எம்பி என பதவிகளை பகிர்ந்துகொண்டவிதம் கலைஞர் வாழ்க்கையின் கறுப்பு பக்கங்கள்.

அந்த தேவையில்லாத ஆணிகளில் சிலது காணாமல் போய் இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக இருக்கிறார் கலைஞரின் அரசியல் வாரிசான மு.க.ஸ்டாலின்..

தனது நூற்றாண்டு விழாவை தன் மகன் ஆட்சியாளனாக இருந்து சீறும் சிறப்புமாக நடத்தவேண்டும் என்று அவர் கண்டிப்பாக விரும்பியிருப்பார். அவர் விருப்பத்திற்கு காலம் கம்பீரமாகவே வழி வகுத்து தந்திருக்கிறது.

நம்மை பொறுத்தவரை, கலைஞர் என்பவரை மொத்தமாக பார்க்காமல், மலைக்கவைக்கும் திரைக்கதை வசனகர்த்தா, ரசனைமிக்க இலக்கிய வாதி, போராட்ட குணம் ஓயாத அரசியல்வாதி, தொலை நோக்கு சிந்தனை கொண்ட ஆட்சியாளன், என பிரித்து ஒவ்வொரு பக்கமாக ஆராய்ந்தால்தான் அந்த மனிதனின் பிரமாண்டம் தெரியவரும்.
.
கலைஞரின் 7-ஆம்ஆண்டு நினைவு தினத்தையொட்டி நமக்கு தெரிந்த அளவு மீண்டும் நினைவு கூர்ந்து இருக்கிறோம்.