சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் நாகேந்திரன் உள்பட  17 பேர் மீது சென்னை காவல்துறை போட்டிருந்த குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராக் மனைவி, இந்த கொலை விவகாரத்தில் சென்னை காவல்துறையின் நடவடிக்கை திருப்திகரமானதாக இல்லை என கூறி, வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு (2024) ஜூலை 5 ஆம் தேதி மாலை, பெரம்பூரில் ஒரு கட்டுமானப் பணிக்கு ஆம்ஸ்ட்ராங் சென்றிருந்தபோது, ஒரு கும்பல் அவரை வெட்டிக் கொன்றது . இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 28 சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை மீட்க அழைத்துச் செல்லப்பட்டபோது, காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர்களில் ஒருவரான திருவேங்கடம், ஜூலை மாதம் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் . செம்பியம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, நகர காவல் ஆணையர் ஏ. அருண் உத்தரவின் பேரில் சிறப்புக் குழுக்கள் முழுமையான விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கு சம்பந்தமாக அக்டோபர் 3, 2024 அன்று காவல்துறைய  தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரின் சதி மற்றும் கொலையில் தொடர்புடைய 30 பேர் பெயரிடப்பட்டுள்ளனர். வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கும்பல் கும்பல் நாகேந்திரன் முதல் குற்றவாளியாகவும், தலைமறைவான கும்பல் சம்பவ் செந்தில் இரண்டாவது குற்றவாளியாகவும் பெயரிடப்பட்டுள்ளனர். நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். பொன்னை பாலு, அருள், ராமு என்கிற வினோத், ஹரிஹரன், திருச்சியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், வழக்கறிஞருமான மலர்க்கொடி, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தொ.மு.ச., பிரவீன் என்ற ஹரிஹரன், திருநின்றவூரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகியோர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

பின்னர், இந்த குற்றவழக்குகளில் தொடர்புடைய 17 பேர் மீது சென்னை காவல்ஆணையர் அருண் குண்டர் சட்டத்தில் அடைத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து கைது செய்யப்பட்ட நாகேந்திரன் உள்பட 17 பேர் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. . கைதான 27 பேரில் நாகேந்திரன் உள்பட 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் விசாரணையில் தலையிட்டுள்ளதால் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது சிபிஐ விசாரணை கேட்ட மனுவை ஏற்க கூடாது என அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கில் ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது..