சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திருப்பூர், கோவை இரண்டு நாள் பயணத் திட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் இறுதியில் அவரது கோவை பயணத்திட்டம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, அந்த சுற்றுப்பயணம் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து தற்போது புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, ஆகஸ்டு 11, 12-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம் மேற்கொள்கிறார். அப்போது கோவையில், திருப்பூர் மாவட்டங்களில் ரோடு ஷோ மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

மாவட்டங்கள் தோறும் நேரடியாக சென்று, கள ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11, 12-ந்தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற் உள்ளதுடன், ரோடு ஷோ நடத்தவும் தீர்மானித்துள்ளார்.
சென்னையில் இருந்து கோவை சென்று அங்கிருந்து திருப்பூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து கோவையில் புதிய பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். இதனைத்தொடர்ந்து மடத்துக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து ஆகஸ்ட் 12-ந்தேதி பொள்ளாச்சிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாய பொதுமக்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக கட்டப்பட்டுள்ள புதிய அரங்கத்தை திறந்து வைக்கிறார். இந்த 2 நாட்கள் கோவையில், திருப்பூர் மாவட்டங்களில் ரோடு ஷோ மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.