சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இதில் 3,256 தேர்வு பெற்றுள்ள நிலையில், அவர்கள் வரும் 8ந்தேதி மாலைக்குள் தேர்வு செய்யப்பட்டுள்ள கல்லூரிகளில் சேர உத்தரவிடப்பட்டு உள்ளது.

மருத்துவம் சார் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது ஒதுக்கீட்டு ஆணையை ஆனைலைனில் இருந்து பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வு செய்த கல்லூரியில் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்காக அரசு கல்லூரிகளில் 3,256 இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 20,026 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதில் பி.எஸ்.சி நர்சிங், பி.பார்ம், பிசியோதெரபி உள்ளிட்ட 19 வகையான 4 ஆண்டு பட்டப்படிப்புகள், பார்ம் டி (Pharm D) 6 ஆண்டு மற்றும் 3 ஆண்டு பட்டப்படிப்புகள், செவிலியர் பட்டயப் படிப்பு ஆகியவற்றுக்கு ஜூன் 17 முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை www.tnmedicalselection.net என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மேற்கூறியுள்ள இடங்களுக்கு 61,735 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கிடையே 19 வகையான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர் களின் தரவரிசை பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 25 ஆம் தேதி வெளியிட்டார்.
அதனுடன் பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி உள்ளிட்ட 19 வகையான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
இந்த நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டுள்ள முதல் சுற்று கலந்தாய்வு அட்டவணையில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு ஜூலை 30 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலை 5 மணி வரை தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள 20,207 மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம் என்று அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளை தேர்வு செய்ததன் அடிப்படையில் மாணவர்களுக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை அரசு இனவாரி அடிப்படையில் ஒதுக்கீடு செய்து அநற்று (ஆகஸ்ட் 4) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மருத்துவம் சார் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.