நெட்டிசன்
பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
அண்ணாவின் அருமை சீடன். நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி..
திமுகவில் மின்னிய முதல் டாப் ஸ்டார். திமுக ஆரம்பிக்கப்படு வதற்கு முன்பே திராவிட இயக்க கொள்கைகளை மேடை நாடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சென்றவர்.
அண்ணாவிற்கு மிகவும் பிடித்தமானவர். அண்ணா எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றவர். உண்மையில் எம்ஜிஆர் அடைய வேண்டிய இடத்தை அடைந்திருக்கவேண்டியவர்
1950களில் நிறைய படங்கள் நடித்தார். தமிழக சட்டசபைக்குள் எம்எல்சியாக நுழையும் பாக்கியமும் இவருக்கு கிடைத்தத. எம்ஜிஆரின் அபரிதமான வளர்ச்சி திமுகவில் பல ஆரம்பகால நடிகர்களை ஓரம் கட்டியது. கேஆர் ராமசாமி. எஸ்எஸ்ஆர், சகஸ்ரநமம், வளையாபதி முத்துகிருஷ்ணன் என அது ஒரு பட்டியல் உண்டு.
அதேநேரத்தில் கே.ஆர் ராமசாமிமீது எம்ஜிஆர் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் கடைசி காலத்தில், நாடோடி அரசகட்டளை, நம்நாடு ஆகிய படங்களில் முக்கிய பாத்திரங் களில் வாய்ப்பு தந்தார். எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்திருந்த நேரம். கேஆர்ஆர் மகள் கலைசெல்வி நினைவுகூறுகிறார்..
“‘ திடீரென்று என் அம்மாவை அழைத்து எம்ஜிஆர் என் கல்யாணம் பற்றி பேசினார். எல்லா செலவுகளையும் தானே ஏற்றுக்கொள்வதாக சொன்னார். அதன்படியும் செய்தார் கலைவாணர் மகனுக்கு என்னை மணமுடித்து வைத்தார்” . நந்தனம் பகுதியில் கேஆர் ராமசாமி குடும்பத்திற்கு அரசு குடியிருப்பு ஒன்றை வழங்கினார் முதலமைச்சர் எம்ஜிஆர்.
மனோகரா நாடகமாக போடப்பட்டபோது கே. ஆர். ராமசாமி மனோகராவாக நடிக்க மனோகராவின் தாயார் பத்மாவதியாக நடித்தவர் நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன்..
வேலைக்காரி படமாவதற்கு முன்பு 1946- கே ஆர் ராமசாமி நடித்த நாடகம் தஞ்சாவூரில் ஒரு வருடம் தொடர்ச்சியாக நடந்தது என்பதெல்லாம் தனி வரலாறு.
செல்லப்பிள்ளை படத்தில் இடம் பெற்ற இந்த பாடலுக்கு இடையே ஒலிக்கும் கேஆர்ஆரின் கம்பீரக் குரல் வாவ்.. ரேடியோவில் எத்தனையோ முறை கேட்ட பாடல். தன் சம்பாதியத்தையெல்லாம் திமுகவுக்காக வாரி வாரி வழங்கிய வள்ளல் நடிப்பிசை புலவர் கே.ஆர் ராமசாமி..
மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் தொடங்கப்பட்ட அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.
1971 ஆம் ஆண்டு இதே நாளில் தான் மறைந்தார். 54-ஆம் ஆண்டு நினைவு நாள்.
#KR_Ramasamy #Anna