சென்னையின் போக்குவரத்து சிக்னல்கள் பெரிய அளவில் மாற்றியமைக்கப்பட உள்ளன, பிரதான சாலைகளில் உள்ள 165 சந்திப்புகளில் Al மூலம் செயல்படும் சிக்னல்கள் பொருத்தப்பட உள்ளன. இவை நிகழ்நேர சாலை நெரிசல் நிலைகளின் அடிப்படையில் தானாகவே கால அவகாசத்தை தீர்மானிக்கும்.

வேப்பேரி மற்றும் ஈகா தியேட்டர் சந்திப்பு உட்பட ஈ.வி.ஆர் சாலையில் உள்ள ஆறு சந்திப்புகளில் ஏற்கனவே இந்த சிக்னல் அமைப்புகளின் சோதனை நடைபெற்று வருகிறது.

சந்திப்பில் உள்ள அனைத்து பாதையிலும் சீராக 60 – 90 வினாடிகள் என்று இருந்த நிலையில், தற்போது நெரிசலான பாதைகள் மற்றும் பரபரப்பான பகுதிகளில் 120 வினாடிகள் வரை பச்சை விளக்குகள் நீடிக்கும் வகையிலும், குறைவான நெரிசல் உள்ள அணுகு சாலைகளில் 30 வினாடிகளாகவும் குறைகிறது.

இதனால், இந்த இடங்களில், உச்ச நேரங்களில் வரிசை நீளம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருவதையும், இந்த சிக்னல்களில் வாகனங்களுக்கான அனுமதி நேரங்கள் சீராக மேம்பட்டு வருவதையும் காட்டுவதாக ஆரம்பகட்ட சோதனையில் தெரியவந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு சந்திப்பிலும் மூன்று முக்கிய கூறுகளை ஆய்வு செய்யும் வகையில் Al தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும், முதலாவதாக வாகன வேகத்தையும் சந்திப்புகளைக் கடக்க எடுக்கும் நேரத்தையும் சென்சார்கள் மூலம் கண்காணிக்கும், இதன் மூலம் நிகழ்நேரத்தில் நெரிசல் நிலைகளை மதிப்பிடும்.

அடுத்ததாக, சிக்னல்களில் பொருத்தப்பட்ட Al மூலம் இயங்கும் கேமராக்கள் வாகனங்களை கணக்கிட்டு, அவற்றின் திசையைக் கண்டறியும் மற்றும் கார்கள், பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் போன்ற வெவ்வேறு விவரங்களை நொடிப் பொழுதில் சேகரித்து அதேகேற்ப எந்த வழித்தடத்தில் எத்தனை காலஅவகாசம் வேண்டும் என்று தீர்மானித்து சிக்னலை இயக்குகிறது.

அந்தந்த சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள இந்த அமைப்புகள் வேப்பேரியில் உள்ள போக்குவரத்து காவல்துறை தலைமையகத்தில் உள்ள மையக்கட்டுப்பாட்டு அறையில் கணினி மூலம் இணைக்கப்பட்டு, அடுத்தடுத்த சந்திப்புகளில் உள்ள சிக்னல்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் தொடர்ச்சியாக க்ரீன் சிக்னல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்கிறது.

இதனால் சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் குறைவதுடன் போக்குவரத்தும் சீராக இருப்பது சோதனை முயற்சியில் பெறப்பட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சென்னையின் 165 சிக்னல்களை Al தொழில்நுட்பங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்சார்கள் மற்றும் Al கேமராக்களை பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் வரும் மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மக்கள் தொகை மற்றும் வாகன வகைப்பாடுகள் குறைவாக உள்ள மேலைநாடுகளை உதாரணமாகக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ள இந்த தொழில்நுட்பம் குறித்து நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமெரிக்காவின் பெனிசில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் SURTRAC அமைப்பில் உள்ள தவறான சென்சார்கள் சீரற்ற க்ரீன் சிக்னல் நேரங்களை ஏற்படுத்தின, அதே போல் லண்டனில் மழையின் போது கேமராக்கள் போக்குவரத்தை தவறாகக் கணித்தன, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில், லூப் டிடெக்டர் தோல்வியால் வாகனமே இல்லாத வழித்தடத்தில் நீண்ட நேர க்ரீன் சிக்னல் போன்ற தொழில்நுட்ப கோளாறுகளை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.