சென்னை: குப்பைகளை அள்ளும் பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து, தூய்மை பணியாளர்கள் இன்று 5வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, முதல்வர் ஸ்டாலின் தொகுதிக்கு உட்பட திருவிநகர் மண்டலத்தில் குப்பைகள் குவிந்து, துர்நாற்றம் விசி வருகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தூய்மை பணியாளர்களின் இந்த போராட்டம் சென்ட்ரல் அருகே உள்ள மாநகராட்சி கட்டித்தின் எதிரே உள்ள பிளாட்பாரத்தில் டென்ட் அமைத்து  இரவு பகல் பாராது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சி தேர்தல் நடைபெற்று திமுக மாநகராட்சியை கைப்பற்றியதும், சென்னை மாநகராட்சிக்குட்ட பல பணிகள் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அதிமுக ஆட்சியின்போதும், சில பகுதிகளில் தனியாரிடம் கொடுக்கப்பட்டு, அது தோல்வி அடைந்த நிலையில், திமுக மாநகராட்சி பதவிக்கு வந்ததும், மீண்டும் குப்பை அள்ளும் பணிகளையும் தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு  முதல் சென்னையின் பல பகுதிகளில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்சியாக வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என பல மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் விடப்பட்டு உள்ளது.

வடசென்னையில் உள்ள திரு.வி.க. நகர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி குடிமை அமைப்பால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ராயபுரம் மண்டலத்தில் குப்பை அகற்றும் தொழிலாளர்கள் 864 பேரும், திரு.வி.க.நகரில் 1,029 பேரும் உள்ளனர். இவர்களின் மூலம் சென்னை மாநகராட்சி தற்போது குப்பைகளை அகற்றி வருகிறது. 

இந்த 2 மண்டலங்களிலும் குப்பைகளை அகற்றுவதை தனியார் மயமாக்குவது குறித்து விவாதிக்க கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் அந்த பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் குப்பை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  குப்பை அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால்  பல ஆண்டுகளாக பணியாற்றி வரும்  தங்களின் வேலை பறிபோகும் ஆபத்து  ஏற்பட்டு இருப்பதாக கூறி வருகினறனார். குப்பைகள் அகற்றும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் இவர்கள் அனைவருமே பாதிக்கப்படுவார்கள். இதனாலேயே இதற்கு தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கை, தொழிற்சங்கத்தினரின் எதிர்ப்பை மதிக்காமல் சென்னை மாநகராட்சி தனியாரிடம் வார்ப்பதிலேயே குளிக்கோளாக உள்ளது. இதனால்,  சென்னை மாநகராட்சியின் முடிவை கண்டித்து  தூய்மை பணி தொழிலாளர்கள்  சென்னை ரிப்பன் பில்டிங்கில்  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சிக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் அடையாளமாக  வடசென்னை பகுதி சி.ஐ.டி.யூ., சென்னை மாநகராட்சி தொழிலாளர் அமைப்பு சார்பில் திரு.வி.க.நகர் ஸ்ட்ராஹன்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் போராட்டம்  நடைபெற்றது. அங்கிருந்து அவர்கள் விரட்டப்பட்டதால், அவர்கள் ரிப்பன் பில்டிங் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   தூய்மைப் பணியாளர்களின் அரசுக்கு எதிரான  இந்த போராட்டம் இன்று  5வது நாளாக தொடர்கிறது.

கடந்த 5 நாட்களாக ராயபுரம், திரு.வி.நகர்  மண்டலங்களில் குப்பைகள் அள்ள யாரும் வராததால், பொதுமக்கள் சாலையில் குப்பைகளை கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் சாலையோரம் கும்பைகள் குவிந்து கிடப்பதுடன், குப்பைதொட்டிகள் உள்ள பகுதியும் குப்பைகளால் நிரம்பி வழிந்து, நாய்களால் குப்பைகள் இழுக்கப்பட்டு, சாலைகளில் சிதறி காணப்படுகிறது. இதனால்,   ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் குப்பைகள் பெருமளவில் தேங்கியுள்ளதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் அரசும், மாநகராட்சியும் உடனடியாக தலையிட்டு, குப்பை அள்ளும் விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தங்களது போராட்டம் குறித்து கூறிய திமுக மெம்பரான தூய்மை பணியாளர் ஒருவர், எங்களுக்காக யாரும் இல்லை  என்று  விரக்தியாக கூறியதுடன்,  எங்கள் தலைவர் கலைஞர்தான எங்களுக்காக இருந்தார்,  அவர் வழியில் அவர் பிள்ளை என்று நினைத்தோம், ஆனால், அவர் எங்களை ஏமாற்றி விட்டால்,  கலைஞர் போல் யாருமில்லை என்று நிரூபித்து விட்டார்.  15 ஆண்டுகளுக்கு பின்னர்  அரசின் துப்புரவு பணியாளராக எங்களை நியமனம்  செய்தவர் கலைஞர் அவரைத் தவிர இன்னும் யாரும் தூய்மை பணியாளர்களுக்காக பேசவும் இல்லை பணி நிரந்தரம் செய்யவும் இல்லை. தற்போது எங்களது பணியை பிடுக்க அரசும், மாநகராட்சியும் முடிவு செய்து, குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு கொடுக்கிறது. இதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது, அதனால்தான் போராட்டம் நடத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.