பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில்  கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான எஸ்டி குமாரசாமியின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா தனது வீட்டில் பணியாற்றி வந்த  பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தொடர்பான வீடியோ வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணும்,   அவர் மீது வன்கொடுமை புகார் அளித்தார். புகாரில் ரேவண்ணா தன்னை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பான வழக்கில்,   அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வீடியோ வெளியான சில நாள்களில்

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் முதல்வரும் தற்போதைய மத்திய அமைச்சருமான குமாரசாமியின் அண்ணன் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் அந்தரங்க வீடியோ கடந்த  2024ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் ரேவண்ணா பெண்களை வன்கொடுமை செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பிய நிலையில், அந்த வீடியோக்களில் இருப்பது தான் அல்ல என பிரஜ்வல் ரேவண்ணா முதலில் மறுப்பு தெரிவித்திருந்தார். இதனிடையே, இந்த அந்தரங்க வீடியோ வெளியான சில நாள்களில் அவர் வீட்டில் பணிபுரிந்து வந்த 48 வயதான பணிப்பெண் அவர் மீது வன்கொடுமை புகார் அளித்தார். புகாரில் ரேவண்ணா தன்னை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மாநில  காங்கிரஸ்  அரசு சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர், இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்திய நிலையில், ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் ஹசன் தொகுதி எம்.பி.யாக இருந்த அவர், கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ரேவண்ணா மீது மூன்று பாலியல் வன்கொடுமை வழக்குகள் மற்றும் ஒரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டது. அவற்றில் ஒரு வழக்கில் விசாரணை முடிந்த பிறகு இது முதல் முக்கிய தீர்ப்பு வெளியாகி உள்ளது.

ஜூலை 29 அன்று விசாரணை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், ஆகஸ்ட் 1 அன்று நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் தீர்ப்பை வழங்கினார். ஆகஸ்ட் 2 அன்று தண்டனையின் அளவு அறிவிக்கப்பட்டது.

நீதிபதி சந்தோஷே் ஹஜானா பட், இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும், தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. குற்றத்தின் தீவிரம் மற்றும் குற்றவாளியின் அந்தஸ்து இரண்டையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவருக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கியது. நீதிமன்ற அறையில் நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது ரேவண்ணா கண்ணீர் விட்டார்.  தீர்ப்பில்,   பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில்  அவருக்கு  ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

அதிகாரம் சலுகைகளைப் பாதுகாக்கத் தவறியதால், பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அரசியல் செல்வாக்கு மற்றும் உயர்மட்ட குடும்ப மரபு இருந்தபோதிலும், டிஜிட்டல் மற்றும் நேரில் கண்ட சாட்சியங்கள் தீர்க்கமானவை என நிரூபிக்கப்பட்ட பின்னர், முன்னாள் ஜேடி(எஸ்) எம்.பி. குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.