டெல்லி
கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்ந்த 5892 வழக்குகளில் 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளை அடக்க பாஜக அரசு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால் இதை மத்திய அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில் திருணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகேத் கோகலே அமலாக்கத்துறையின் வழக்குகள் எத்தனை நிலுவையில் உள்ளன எனவும் இவற்றில் எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது எனவும் வழக்குகளின் தற்போதைய நிலவரம் குற்த்தும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில்,
கடந்த 10 ஆண்டில் அமலாக்கத்துறை தொடர்ந்த 5,892 வழக்குகளில் 1,398 வழக்குகள் மட்டுமே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் 8 வழக்கில் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை வழக்குகளில் 77% வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எந்த ஆதாரமும் இல்லாததால் 77% வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
10 ஆண்டில் ED தொடர்ந்த வழக்குகளில் 0.13% வழக்குகளில் தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் ”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே,
“மோடி அரசு எதிர்க்கட்சிகளை குறிவைக்க அமலாக்கத்துறை -ஐ ஒரு தனிப்பட்ட மாஃபியாவாகப் பயன்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை வழக்குகளில், அப்பாவி மக்கள் கூட ஜாமீன் பெற பல மாதங்கள் ஆகும்.கோடிக்கணக்கான பொதுப் பணத்தைச் செலவழித்து ஆயிரக்கணக்கான மக்களைச் சிறையில் அடைத்த பிறகு,அமலாக்கத்துறை 10 ஆண்டுகளில் 0.13% மட்டுமே வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது.
அமலாக்கத்துறை என்பது மோடி மற்றும் அமித்ஷாவின் கிரிமினல் சிண்டிகேட் தான் தவிர வேறில்லை, அதன் ஒரே பணி பாஜகவுக்காக மிரட்டி பணம் பறித்தல் ஆகும்.”
என விமர்சித்துள்ளார்.