டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கோடுத்த சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி டிரம்ப் உடன் பேசவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சிந்தூர் நடவடிக்கையின் போது பிரதமர் மோடி டிரம்ப்புக்கு எந்தவித அழைப்பு விடுக்கவில்லை, அவரிடம் பேசவும் இல்லை. இந்த விஷயத்தில் இந்தியா தனியாக செயல்பட்டது என்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரம் மாதம், ஜம்மு – காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே 7ஆம் தேதி இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து இரு நடுகளுக்கும் இடையே எல்லை பதற்றங்கள் ஏற்பட்டு பின் அடங்கியது.
இந்த விஷயத்தில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான தாக்குதலை மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். மேலும் தன்னால்தான் இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது என்றும், பாகிஸ்தான் மீதான தாக்குதலின்போது இந்திய போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார். டிரம்பின் இதுபோன்ற தகவல்கள் இந்திய அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தின. ஆனால், மத்தியஅரசு அவரது புலம்பல்களை கண்டுகொள்ளவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் டிரம்ப் கூறியதை வேதவாக்காக கொண்டு அவையை முடக்கின,
நாடாளுமன்றத்தில் ஜூலை 21 முதல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் தொடர்ந்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். இதனை தொடர்ந்து இன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக இரு அவைகளிலும் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் இதுபற்றிய விவாதத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். அப்போது, ”பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.
ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்துப் பேசியிருந்தார். பிறகு, ஜூன் 17ஆம் தேதி, கனடாவில் சந்திக்காதது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளிக்கப் பேசியிருந்தார்.
பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு தயாராக உள்ளதாக மற்ற நாடுகளில் இருந்து மே 10ஆம் தேதி அழைப்பு வந்தது. ராணுவ நடவடிக்கைகளின் தலைமை தளபதி மூலம் இதனைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
எந்தவொரு நிலையிலும் அமெரிக்காவுடன் ஆபரேஷன் சிந்தூர் குறித்துப் பேசவில்லை” எனக் குறிப்பிட்டார்.
”ஆபரேஷன் சிந்தூர் உடன் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை நின்றுவிடாது. நாட்டு குடிமக்களைக் காக்க, பயங்கரவாதி களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும். ராஜதந்திர பார்வையில், வெளியுறவுக் கொள்கை கண்ணோட்டத்தில், பஹல்காம் தாக்குதல் குறித்து உலக நாடுகளைப் புரிந்துகொள்ளச் செய்வதே நமது இலக்காக இருந்தது.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச அரங்குகளைக் கவனிக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியையே மேற்கொண்டோம்.
இவ்வாறு கூறினார்.