பெங்களூரு விமான நிலைய வளாகத்தில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபே-வின் கிளையில் வழங்கப்பட்ட பொங்கலில் புழு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது.
இந்த நிலையில், தங்கள் உணவகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சிலர் செயல்பட்டு வருவதாகவும் தங்களை ரூ. 25 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும் உணவகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெங்களூரு காவல் ஆணையரிடம் வழங்கப்பட்ட புகாரில், தங்கள் உணவகத்தின் விமான நிலைய கிளையில் சாப்பிட்ட ஏழு பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வழங்கப்பட்ட உணவு தரமாக இல்லை என்று கூறி கடை மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கிருந்த மற்ற வாடிக்கையாளர்களுக்கு அசௌகரியம் ஏற்பட்ட நிலையில் உணவக உரிமையாளரை தொடர்பு கொண்டு தங்களுக்கு இழப்பீடு வாங்கித் தருமாறு கூறியதோடு இல்லையென்றால் இதுகுறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து அவர்களை தொடர்பு கொண்ட மேலாளரிடம் பெங்களூரின் பிரிகேட் ரோட் அருகே வந்து தங்களுக்கு ரூ. 25 லட்சம் கொடுக்க வேண்டும் என்று தடாலடியாக மிரட்டினர்.
ஏற்கனவே, தங்கள் உணவகத்தில் இதேபோன்று உணவில் புழு இருப்பதாக பலர் குற்றச் சாட்டு கூறிய நிலையில் அது அனைத்தும் போலி என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மிரட்டி பணம் பறிப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பலை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று உணவகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.