டெல்லி: காலியாக உள்ள இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

துணை குடியரசு தலைவர் மற்றும் ராஜ்யசபா தலைவராக இருந்து வந்த ஜக்தீப் தன்கர் திடீரென தனது உடல்நலத்தை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது ராஜினாமா கடிதம் குடியரசு தலைவர் முர்முவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப் பட்டது.
இதையடுத்து புதிய துணை ஜனாதிபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில் பிரதமர் மோடி வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதால், அவர் வந்த பிறகே, துணைஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தெரிய வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளை தொடங்கி உள்ளது. குடியரசுதலைவரால்,தன்கரின் ராஜினாமா ஏற்பட்ட நிலையில், துணை ஜனாதிபதி பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அடுத்த 60 நாட்களுக்குள் அந்த பதவிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் அதன்படி, செப்., 19க்குள் புதிய துணை ஜனாதிபதி பதவியேற்க வேண்டும் என்பதால், தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தலைமை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் விதிகள் 1974ன்படி, இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான ஆலோசனைகளிலும், தேர்தல் நடத்துவதற்கான தயாரிப்பு வேலைகளிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்ட நிலையில், இன்று இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்து அறிவித்து உள்ளது.

துணை குடியரசு தலைவர் தேர்தல் எப்படி?
துணை ஜனாதிபதி தேர்தலில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் மட்டுமே ஓட்டளிக்க முடியும். இரு சபைகளின் நியமன எம்.பி.,க்களும் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள்.
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவர் வெற்றிபெற 394 ஓட்டுகள் தேவை. தற்போது, 543 உறுப்பினர்கள் உடைய லோக்சபாவில், மேற்கு வங்கத்தின் பஷீர்ஹத் தொகுதிக்கான ஒரு எம்.பி., ‘சீட்’ மட்டும் காலியாக உள்ளது.
245 உறுப்பினர்கள் உடைய ராஜ்யசபாவில் 5 எம்.பி., சீட்கள் காலியாக உள்ளன.
கடந்த மாதம் பஞ்சாப் சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தலில் சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றதால், தன் ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அதே போல், ஜம்மு – காஷ்மீரிலும் நான்கு எம்.பி., சீட்கள் காலியாக உள்ளன. இதனால், இரு சபைகளிலும் மொத்தம் உள்ள எம்.பி.,க்களின் எண் ணிக்கை, நியமன எம்.பி.,க் களையும் சேர்த்து 786.
இதில், துணை ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற மொத்தம் 394 ஓட்டுகள் தேவை. அந்த வகையில் பார்த்தால், லோக்சபாவில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு 293 எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில் 129 எம்.பி.,க்களும் உள்ளனர். எனவே, தே.ஜ., கூட்டணி நிறுத்தும் வேட்பாளர், 422 எம்.பி.,க்களின் ஓட்டுகள் பெற்று எளிதில் வெற்றி பெற்று விடுவார்.
துணை ஜனாதிபதி பதவிக்கு கடும் போட்டி:
நாட்டின் இரண்டாவது பெரிய பதவியான துணை ஜனாதிபதி பதவிக்கு, பல மூத்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. குறிப்பாக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பீஹார் முதல்வர் நிதிஷ் குமா;ர், தற்போதைய ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ், மத்திய இணைஅமைச்சர் ராம்நாத் தாக்கூர், , முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான காஷ்மீரை சேர்ந்த குலாம் நபி ஆசாத் , ஜம்மு – காஷ்மீரின் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்ஸேனா, ஆகியோரது பெயர்களும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான பெயர் பட்டியலில் இடம் பிடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார்? தேசிய ஜனநாயக கூட்டணியில் கடும் போட்டி!