ஆஸ்திரேலியாவின் போரோனியாவில் உள்ள ஒரு முக்கிய இந்து கோயிலில் திங்களன்று சமூக விரோதகள் மதவெறுப்பை தூண்டும் வகையில் சிகப்பு பெயிண்ட் மூலம் சுவற்றை பாழாக்கியுள்ளனர்.
தி ஆஸ்திரேலியா டுடேயின் அறிக்கையின்படி, வாட்ஹர்ஸ்ட் டிரைவில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில் சுவற்றில் ‘வீட்டிற்குச் செல்லுங்கள்’ என்று சிகப்பு பெயிண்டில் அவதூறு வாசகம் எழுதப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கோயிலின் அருகில் உள்ள இரண்டு உணவகங்களிலும் இதேபோன்று எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருதபோதும், உள்ளூர் இந்து சமூகத்தின் முக்கியமான ஆன்மீக மையமான கோயில் சுவற்றை சிதைத்தது பலரையும் வேதனையடையச் செய்துள்ளது.
விக்டோரியா காவல்துறை இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியதாகவும், கோயில் மற்றும் இரண்டு உணவகங்கள் உட்பட போரோனியாவில் நடந்த நான்கு தொடர்புடைய சம்பவங்களை விசாரித்து வருவதாகவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆஸ்திரேலிய இந்து கவுன்சிலின் விக்டோரியா பிரிவின் தலைவர் மக்ரந்த் பகவத், திங்கட்கிழமை காலை புனித இடம் சேதமடைந்ததைக் கண்ட அதிர்ச்சியை விவரித்தார். “எங்கள் கோயில் அமைதி, பக்தி மற்றும் ஒற்றுமையின் சரணாலயமாக இருக்க வேண்டும்” என்று பகவத் கூறியதாக தி ஆஸ்திரேலியா டுடே மேற்கோள் காட்டியது.
விக்டோரியாவின் பிரதமர் ஜெசிந்தா ஆலன் கோயிலில் நடந்த நாசவேலையை பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை என்றாலும், அவரது அலுவலகம் கோயில் நிர்வாகத்திற்கு ஒரு தனிப்பட்ட செய்தியை அனுப்பியுள்ளது. “ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில் ஒரு வழிபாட்டுத் தலத்தை விட அதிகம் – இது அரவணைப்பு மற்றும் சமூகத்தின் இடம். இது மக்கள் இருகரம் நீட்டி வரவேற்கப்படும் இடம். நம்பிக்கை கடைப்பிடிக்கப்படும் இடத்தில், மரபுகள் மதிக்கப்படுகின்றன, மேலும் கருணை மற்றும் இரக்கத்தின் மதிப்புகள் ஒவ்வொரு நாளும் வாழ்கின்றன,” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடைபெறுவது முதல் முறையல்ல. 2023ம் ஆண்டு பிரதமர் மோடி ஆஸ்திரேலியா செல்வதற்கு சில தினங்களுக்கு முன் சிட்னியின் ரோஸ்ஹில்லில் உள்ள BAPS கோயில் சுவற்றில் இதேபோன்று மதவெறுப்பு வாசகங்கள் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதே ஆண்டில், மெல்போர்னில் மூன்று இந்து கோயில்களும், பிரிஸ்பேனில் இரண்டு இந்து கோயில்களும் காலிஸ்தான் ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டன.