உ.பி.யின் காசியாபாத்தில் போலியாக இயங்கி வந்த வெளிநாட்டு தூதரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்புப் பணிக்குழு (STF) நடத்திய ஒரு மிகப்பெரிய நடவடிக்கையில், காசியாபாத் மாவட்டத்தில் சட்டவிரோத தூதரகத்தை நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அந்த நபர் தன்னை வெளிநாட்டு தூதர் என்று கூறிக் கொண்டு “தூதரகத்தை” நடத்தி வந்துள்ளது தெரியவந்தது.
ஹர்ஷ் வர்தன் ஜெயின் என்ற நபர் கவி நகரில் ஒரு வாடகை வீட்டில் மேற்கு ஆர்க்டிக் தூதரகத்தை நடத்தி வந்தார்.
அவர் தன்னை மேற்கு ஆர்க்டிகா, சபோர்கா, பவுல்வியா, லோடோனியா போன்ற நாடுகளின் தூதர் என்று அழைத்துக் கொண்டதாக உ.பி. காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த போலி தூதரகத்தில் இருந்து ரூ.44,70,000 ரொக்கம் பல வெளிநாடுகளின் பணம் மற்றும் பல நிறுவனங்களின் ஆவணங்கள் மற்றும் பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களின் 34 முத்திரைகள், இரண்டு போலியான பிரஸ் கார்டுகள், மைக்ரோநேஷன் நாடுகளின் 12 ராஜதந்திர பாஸ்போர்ட்டுகள், வெளியுறவு அமைச்சகத்தின் முத்திரையுடன் கூடிய போலி ஆவணங்கள், இரண்டு போலி பான் கார்டுகள் மற்றும் தூதரக பெயர் பலகையுடன் வலம்வந்த நான்கு சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஷெல் நிறுவனங்கள் மூலம் ஹவாலா மோசடியை நடத்துவதிலும் அவர் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் பிரதமர், ஜனாதிபதி மற்றும் பிற பிரமுகர்களுடன் இருப்பதைக் காட்டும் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்தினார்.
மேலும், வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வேலை வாய்ப்புகளை பொய்யாக உறுதியளித்து ஜெயின் தரகு ஒப்பந்தங்களில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது.