டெல்லி
வரும் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன, இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு இதை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் வலியுறுத்தி வருகின்றன.
மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவை தலைவரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கேள்வி நேரம் உட்பட அவையின் பிற அலுவல்கள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இதனால், நேற்று முன்தினமும், நேற்றும் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி இன்று, தொடர்ந்ததால், அவையை இன்று முழுவதும் ஒத்திவைப்பதாக ஹரிவன்ஷ் அறிவித்தார். எனவே, மழைக்காலக் கூட்டத் தொடரின் 3-ம் நாளான இன்றும் இரு அவைகளும் முழுமையாக முடங்கின.
இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடைபெறும் என்றும், மக்களவையில் 16 மணிநேரமும், மாநிலங்களவையில் 9 மணிநேரமும் விவாதத்துக்காக ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அலுவல் ஆலோசனைக் குழு (பிஏசி) கூட்டத்திற்குப் பிறகு இது குறித்த முடிவு இறுதி செய்யப்பட்டது.
இந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.