பிரதமர் நரேந்திர மோடி லண்டன் செல்வதற்கு முன்னதாக, இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததாக, ஆதாரங்களை மேற்கோள் காட்டி PTI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு பிரதமரின் நான்கு நாள் பயணமாக இன்று தொடங்குகிறது.

இந்த பயணத்தின் போது இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாளை ஜூலை 24ம் தேதி லண்டனில் கையெழுத்தாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் செல்லும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இங்கிலாந்து பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

முன்னதாக, மே 6 ஆம் தேதி, இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகக் தெரிவித்தன.

இந்த வர்த்தக ஒப்பந்தம் தோல், காலணிகள் மற்றும் ஆடைகள் போன்ற பொருட்களின் ஏற்றுமதி மீதான வரிகளை நீக்கவும், பிரிட்டனில் இருந்து விஸ்கி மற்றும் கார் இறக்குமதியை மலிவானதாக மாற்றவும் முன்மொழிகிறது.

இந்த ஒப்பந்தம் 2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 120 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், அது நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும்.