திருவனந்தபுரம்: கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 37 நாட்களுக்கு பிறகு தாயகம் புறப்பட்டது பிரிட்டன் போர் விமானம்.
திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட பிரிட்டன் எஃப் – 35 ரக பிரிட்டன் போர் விமானம், சுமார் ஒருமாத காலத்துக்குப் பின்னர் இன்று தாய்நாடு புறப்பட்டுச் சென்றது.

பிரிட்டன் எஃப் – 35 ஜூன் 14 ஆம் தேதியில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. பிரிட்டன் கடற்படைக்குச் சொந்தமான இந்த விமானம், திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பிய பிறகு மீண்டும் பறக்க முயன்றபோது, பழுதானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, திருவனந்தபுரத்தில் பழுதுநீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அது வெற்றியாகததால், பிரிட்டனில் இருந்து 25 பேர் கொண்ட பொறியாளர்கள் கேரளா வருகை தந்து விமானத்தை சரி செய்து வந்தனர். இதையடுத்து, பழுது சரிசெய்யப்பட்டது.
இதையடுத்து, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எஃப் – 35 போர் விமானம் இன்று காலை பிரிட்டனுக்குப் புறப்பட்டுச் சென்றது.
மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களில் ஒன்றான எஃப் – 35 ரக பிரிட்டன் போர் விமானம், அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி ஆகிய நாடுகளிடம் மட்டுமே இருப்பதாகக் கூறப்படும் இந்த ரக விமானம், போர்க்களத்தில் சிறப்பு வாய்ந்ததாகக் கொள்ளப்படுகிறது. போர்க்களத்தின் முழுக் காட்சியையும் விமானிகளுக்கு காட்டும் தொழில்நுட்ப சென்சார்கள் கொண்டிருக்கும் இந்த விமானம், 51 அடி நீளமும், 7,000 கிலோ எடையை சுமந்து செல்லும் திறனுடையது. இதன் மதிப்பு 100 மில்லியன் டாலர் (ரூ. 859 கோடி) என்கின்றனர்.
திருவனந்தபுரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது, இந்த விமானத்தின் அருகே யாரையும் செல்லவிடாமல், அதனருகே விமானி ஒருவரும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரும் பாதுகாப்புப் பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.