திருவனந்தபுரம்

பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி தன் மீதான பணமோசடி வழக்கு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2022ல் வெளியான ‘மஹாவீர்யார்’ படத்தின் தோல்வியால் ரூ.95 லட்சம் வழங்குவதுடன், அப்ரித் ஷைன் இயக்கும் ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு பார்ட் 2’ படத்தை தயாரிக்க வாய்ப்பு வழங்குவதாக நிவின் பாலி உறுதியளித்திருந்ததாக அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது. இப்படத்திற்கு முதன்மை தயாரிப்பாளராக இருந்த இயக்குநர் அப்ரித் ஷைன், படத்தின் தயாரிப்பை பி.எஸ் ஷாம்னஸிடம் மாற்றிவிட்டிருக்கிறார்.

இப்படத்தின் துபாய் விநியோக உரிமையை விற்றதில் நிவின் பாலி, ரூ.2 கோடி வரை பி.எஸ் ஷாம்னஸுக்குத் தெரியாமலே அட்வான்ஸாக வாங்கியிருப்பதாகவும், துபாய் உரிமத்தையும் அவரே வைத்திருப்பதாகவும் தயாரிப்பாளர் பி.எஸ் ஷாம்னஸ் தரப்பில் கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பான வழக்குத் தொடர்ந்திருக்கும் தயாரிப்பாளர் பி.எஸ் ஷாம்னஸ், நிவின் பாலி பணமோசடி செய்திருப்பதாகவும், தயாரிப்பாளரை ஏமாற்றி இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.

நடிகர் நிவின் பாலி,

“இது தொடர்பான வழக்கு 28.06.2025 முதல் நீதிமன்ற நடுவர் குழு விசாரணையில் இருக்கிறது. இதில் ரகசியத்தன்மையை உறுதி செய்வதற்காக ஒரு தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மதிக்காமல், அந்த வழக்கின்மேல் மேலும் ஒரு புதிய வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறோம். உண்மை கூடிய விரைவில் வெளிவரும்”

என்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.