ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவேண்டும் என்றும் இல்லையென்றால் இரண்டாம் நிலைத் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் நேட்டோ தலைவர் மார்க் ரூட் ஆகியோர் இந்தியாவை எச்சரித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாற்றுவழிகளை கையாளும் என்றும் இதுகுறித்த சமீபத்திய அச்சுறுத்தல்களால் கவலைப்படவில்லை என்றும் கூறினார்.

“இந்த விவகாரம் தொடர்பாக வெளியான அறிக்கைகளை பார்த்துள்ளோம், அதுதொடர்பான முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மக்களின் எரிசக்தித் தேவைகளைப் பாதுகாப்பது முக்கிய கடமை. அதனால், உலகளாவிய சூழ்நிலைகளால் வழிநடத்தப்படுகிறோம் மேலும் சந்தைகளில் கிடைப்பதால் வாங்குகிறோம்” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெளிவுபடுத்தினார்.

மேலும், “இந்த விஷயத்தில் எந்தவொரு இரட்டை நிலைக்கு எதிராகவும் எச்சரிக்கையாக இருப்போம்” என்று கடுமையாகக் கூறினார்.

செப்டம்பர் மாதத்திற்குள் ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், மாஸ்கோவிற்கு எதிராக 100% வரிகளையும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கிய நாடுகளுக்கு இரண்டாம் நிலைத் தடைகளையும் விதிக்கப்போவதாக டிரம்ப் இந்த வார தொடக்கத்தில் கூறினார்.

நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே புதன்கிழமை இந்தியாவை “விளாடிமிர் புடினுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்க” வலியுறுத்தினார், மேலும் இதுபோன்ற வரிகள் “மிகவும் கடுமையாகப் பாதிக்கும்” என்று எச்சரித்தார்.

இந்த ஆண்டின் முதல் பாதியில் ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி ஓரளவு உயர்ந்தது, தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் நயாரா எனர்ஜி ஆகியவை மாஸ்கோவிலிருந்து ஒட்டுமொத்த கொள்முதலில் பாதியை இறக்குமதி செய்தன.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு தேவையில் 35% ரஷ்யாவிடம் இருந்து பெறப்படுகிறது அதைத் தொடர்ந்து ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றிடம் இருந்து பெறப்படுகிறது.

இரண்டாம் நிலைத் தடைகளால் ரஷ்ய விநியோகங்கள் பாதிக்கப்பட்டால், ‘மாற்று ஆதாரங்கள்’ மூலம் இந்தியா தனது எண்ணெய் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதிப்படுத்தினார்.

“இந்த அச்சுறுத்தல் குறித்து இந்தியா கவலைப்படவில்லை, இந்தியா அதன் விநியோக ஆதாரங்களை அதிகரித்துள்ளது இதற்கு முன் 27 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்பட்ட நிலையில் தற்போது அது 40 நாடுகளாக உயர்ந்துள்ளது, அதனால் எந்தவொரு சூழலையும் சமாளிப்போம்” என்றும் தெரிவித்துள்ளார்.