கோயில் கொண்ட சிலை…
ந்திய திரையுலக ஜாம்பவன் வி.சாந்தாராம் அவர்களால், ‘’உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் அற்புதமான நடிகை’’ என்று பெருமையாக பேசப்பட்டவர்…. அபிநய சரஸ்வதி என்று அழைக்கப்படும் சரோஜாதேவி…
1955ல் அறிமுகமாகி என்.டிஆர், ராஜ்குமார், நாகேஸ்வ ரராவ், சிவாஜி, ஜெமினி என தென்னிந்திய டாப் ஸ்டார்க ளுடன் ஏராளமான படங்களில் இவர்தான் கதாநாயகி.. அதிலும் நாயகிக்கு முக்கியத் துவம் உள்ள படங்களே அதிகம். அதைவிட முக்கியமான விஷயம் அவற்றில் பெரும்பாலான படங்கள் வெற்றிக்கொடி நாட்டியவை என்பதுதான்..
தமிழில் பாகப்பிரிவினை, கல்யாண பரிசு, பாலும் பழமும், ஆலயமணி, ஆடிப்பெருக்கு, புதிய பறவை போன்ற படங்களெல்லாம் இன்றைக்கும் திரும்பத்திரும்ப பார்க்கத் தூண்டுகிற ரகங்கள்..
தமிழை வித்தியாசமாக உச்சரித்ததால் கன்னடத்து பைங்கிளி என்றழைக்கப்பட்ட இவரின் தனிப்பட்ட வாழ்க்கை, ஒரு தெள்ளிய நீரோடைக்கு சமமானது. முதலில் தாய் மீது அளவு கடந்த பக்தி. எங்கே எப்போது பேசினாலும் தாயை நினைவு கூர்ந்துவிட்டு அடுத்ததாக இவர் குறிப்பிடுவது மறைந்த கணவர் ஹர்சாவை.. அவ்வளவு உள்ளன்போடு சொல்வார்.
நாடறிந்த நடிகை என்ற வகையில் எந்த மொழி ஊடகம் பேட்டியெடுத்தாலும் தாய், கணவனுக்கு அடுத்தபடியாக தன்னுடைய தெய்வம் என நன்றியோடு குறிப்பிடுவது எம்ஜிஆரைத்தான்.தன் பிள்ளைக்கு கௌதம ராமச்சந்திரன் என்று பெயர் வைத்தவர், இந்திராகாந்தி மீது கொண்ட அன்பால் மகளுக்கு வைத்த பெயர், இந்திரா
அரச கதைகளிலேயே நடித்து வந்த எம்ஜிஆரை, முதல்படமான நாடோடி மன்னனில் இளவரசியாக அழைத்து சென்றவர், எம்ஜிஆர் உடன் நடித்த கடைசி படமான அரசகட்டளையிலும் இளவரசியாகவே வாழ்ந்தார்.
எம்ஜிஆருக்கு இவர் ஜோடி என்றால் தமிழக ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்பு.. திருடாதே, தாய்சொல்லை தட்டாதே, தாயை காத்த தனயன் பணத்தோட்டம், பெரிய இடத்துப்பெண், படகோட்டி, எங்கவீட்டுப்பிள்ளை, அன்பே வா, பெற்றால்தான் பிள்ளையா போன்ற படங்கள் இன்றைக்கும் செம ஆடியன்ஸ் கொண்டவை. எம்ஜிஆர் உடன் மொத்தம் 26 படங்கள்.
17 வயதில், கன்னட படம் மகாகவி காளிதாசில் நுழைந்து, மறு ஆண்டு தமிழில் சிவாஜியின் தங்கமலை ரகசியம் படத்தில் சின்ன வேடம்.. கிளைமாக்சை நெருங்கும் தருவாயில் மோகினியாக வந்து “யெவ்வனமே, யெவ்வனமே, அழகினிலே என் அழகினிலே ஆடவரெல்லாம் ஆசைகொள்வார் உலகினிலே” என பாடுவார்.அது அப்படியே பலித்தது.  அடுத்தடுத்த ஆண்டுகள் ரசிகர்கள் மத்தியில் சரோஜாதேவி புராணம்தான்..
பாவமன்னிப்பு கல்யாண பரிசு, விடிவெள்ளி, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும் ஆடிப்பெருக்கு, சாரதா என சிவாஜி மற்றும் ஜெமினியுடன் நடிப்பாற்றலுக்கு தீனிபோட்ட பொக்கிஷம்போன்ற படங்கள்..
சிவாஜி பிலிம்சின் முதல் தயாரிப்பான அதுவும் ஈஸ்டட்மென் கலரான புதிய பறவையில் சரோஜாதேவி கோபால் கோபால் என அவர் உருகி உருகி கலக்கிய விதம், காலம் கடந்து இன்றும் என்னமாய் பேசப்படுகிறது..,! அப்போதைய முன்னணி இயக்குநர்கள், அவரை ஒரு முறையாவது தங்களது படத்தில் இயக்கிவிட வேண்டும் என்று துடித்தார்கள். அந்த அளவுக்கு நடிப்பில் கேட்டதை வாரிவாரி கொடுப்பார். அவரின் கிளிப்பேச்சு, எதிர்மறை விமர்சனம் பெற்றதை விட, ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவை பெற்றதால் தான் பத்தாண்டு காலம் அசைக்கமுடியாத முன்னணி கதாநாயகியாக தமிழில் வலம் வர முடிந்தது.
காஞ்சிபுரம் பட்டுச்சேலை பிரியையான அவர், சாதத்துக்கு சாம்பார் என்றால் கலந்துகட்டி அடிப்பார். எங்குமே தன்னை பிரதானமாக வைத்துக் கொள்வதில் செம கில்லாடி.
மறைந்த முதலமைச்சர், ஜெயலலிதா, தன்னுடைய திரையுல தோழிகளுக்கும் சீனியர்களுக்கும் தன் கையாலேயே சமைத்து விருந்து வைத்தபோது அதிகம் மரியாதை வைத்து உபசரித்தது சரோஜாதேவியைத்தானாம். அந்த விருந்தில் பங்கேற்ற பழம்பெரும் நடிகை ராஜஸ்ரீ நம்முடைய வீட்டிற்கு வந்திருந்த போது இந்த தகவலை சொன்னார்.
சரோஜாதேவியை போலவே மிமிக்ரி செய்து அவ்வளவு செல்லமாக நடந்து கொண்டாராம் ஜெயலலிதா…
161 படங்களில் தொடர்ச்சியாக கதாநாயகியாகி நடித்து சாதனை படைத்த சரோஜாதேவியை பெங்களுரின் ‘’மல்லேஸ்வரம் மகராணி’’ என்று இன்டியன் எக்ஸ்பிரஸ் அருமையாக வர்ணித்தது.
Really end of an era…