புளோரிடா: ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின்படி, இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் விண்வெளிக்கு சென்று ஆய்வு செய்து வந்த நிலையில், அவர்களி பயணம் முடிவடைந்து இன்று விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டனர். நாளை பிற்பகல் அவர்கள் பூமி வந்தடைவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இஸ்ரோ, நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ‘அக்ஸியம் – 4’ திட்டத்தை முன்னெடுத்தன. அதன்படி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா , முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன், ஹங்கேரி வீரர் திபோர் கபு, போலன்ந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கீ ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட்டில் ஜூன் 25ம்தேதி இந்திய நேரப்படி நண்பகல் 12.02 மணிக்கு விண்ணில் பறந்தனர்..
சுமார் 28 மணி நேரம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்த டிராகன் விண்கலம், ஜூன் 26ம் தேதி மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. இதையடுத்து விண்கலத்தில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற அவர்களை, அங்கிருந்த விஞ்ஞானிகள் முகமகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இதையடுத்து, ஆக்ஸியம் – 4 குழுவில் உள்ள நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இடையே இந்திய வீரர் சுக்லா பிரதமர் மோடியுடன் அங்கிருந்து உரையாடினார். அப்போது பிரதமர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து விண்வெளி வீரர்கள் நால்வரும் சுமார் 60 ஆய்வுகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்தியா சார்பில் சுபான்ஷு சுக்லா 7 ஆய்வுகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படட்டிருந்தது. அதன்படி நுண் ஈர்ப்பு விசை சூழலுக்கு ஏற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்தும் அவர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அவர்களின் 15 நாட்கள் ஆய்வுகள் முடிவடைந்துள்ளன.

இதற்கிடையில், விண்வெளியில் இருந்த தங்களின் அனுபவங்கள் குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்த நாசா வீரர் பெக்கி விட்சன், “ எங்கள் கடைசி சில நாட்களை நீரேற்றம் செய்யப்பட்ட இறால் உணவுகள் உண்டு மகிழ்ந்து, நண்பர்களுடன் நன்றாக அனுபவித்தோம். அத்துடன் சுபான்ஷு இந்தியாவில் இருந்து கேரட் அல்வா, மாம்பழ ஜுஸ் கொண்டு வந்திருந்தார்.” என்று குறிப்பிட்டிருந்த அவர், சக விண்வெளி வீரர்களுடன் உணவருந்தும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில் 14 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று ஜூலை 14ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்ப புறப்பட்டனர். 22 மணி நேர பயணத்திற்கு பிறகு நாளை (ஜூலை 15ம் தேதி) மாலை 3 மணியளவில் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் பூமியை வந்தடைவார்கள் என நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்களும் பூமிக்கு திரும்பவுள்ள நிலையில், பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய சுக்லா, இந்த பயணம் நம்ப முடியாத வகையில் அமைந்துள்ளதாக கூறினார்.
மனித குலத்தின் விண்வெளி பயணம் நீண்ட வரலாறு கொண்டது எனவும், மிகவும் கடினமானது எனவும் தெரிவித்தார். இருப்பினும், மனிதர்களாகிய நாம் அனைவரும் உறுதியாக இருந்தால், நட்சத்திரங்களை கூட எட்ட முடியும் என சுபான்ஷு சுக்லா கூறினார். 41 ஆண்டுகளுக்கு முன்பு ராகேஷ் சர்மா விண்வெளியில் இருந்து பார்த்தபோது இந்தியா எப்படி இருந்தது என்பதை தங்களிடம் கூறியதாக தெரிவித்த அவர், இன்றைய இந்தியா உலகத்தின் மிக சிறந்த நாடாக திகழ்வதாக குறிப்பிட்டார். நிறைய நினைவுகளை சுமந்துகொண்டு பூமிக்கு வரவுள்ளதாகவும், அந்த நினைவுகளை தனது நாட்டு மக்களிடம் பகிர்ந்துகொள்ள இருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.