விழுப்புரம்: அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை ரூ.1500 வழங்கப்படும் என்றும், திமுக அரசு பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியது என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மயிலம் சட்டமன்றத் தொகுதி நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது,.
உங்களது எழுச்சியை பார்க்கும்போது அடுத்த ஆண்டு நடைபெறுகிற தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்பதை காட்டுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எந்த திட்டம் கொண்டு வந்தாலும் ஒரு குழு போடுவார். அதோடு அந்த திட்டத்தை கைவிட்டு விடுவார். இந்த அரசாங்கம் ஒரு குழு அரசாங்கமாக மாறிவிட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் ஏதாவது திட்டம் இந்த தொகுதிக்கு வந்ததா? என மக்களை பார்த்து கேள்வி எழுப்பியவர், அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டத்தை முடக்கியது தான் அவருடைய சாதனையாகும். ஏழை மக்களுக்காக என்ன திட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள். கொள்ளையடிப்பதற்கு மட்டுமே திட்டங்களை கொண்டு வருகிறார்கள்.
உதாரணமாக டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 கூடுதலாக வசூலிக்கிறார்கள். இதன் மூலம் வருடத்திற்கு 5,400 கோடி கொள்ளையடித்தது தான் தி.மு.க. அரசு. . அதே நேரத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலினும், திமுக அமைச்சா்களும் எப்போது வருமான வரித்துறை சோதனை நடைபெறும் என்ற நடுக்கத்தில் உள்ளனா். ஆகையால், அதிமுகவை விமா்சனம் செய்ய முதல்வருக்கு தகுதியில்லை.
இந்த ஊழல் அரசாங்கம் தொடர வேண்டுமா? இது மட்டுமல்ல ஊழல் இல்லாத துறையே இல்லை. இப்படி ஊழல் மலிந்த ஒரே அரசு தி.முக. அரசு. இதற்கெல்லாம் முடிவு கட்ட வரும் தேர்தல் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலாகும். அ.தி.மு.க. ஆட்சியில் முடிவுற்ற பணிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா காணும் முதலமைச்சர் தான் ஸ்டாலின்.
நீட் தோ்வு ரத்து, கல்விக்கடன் ரத்து என பல பொய் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றிய திமுகவுக்கு, 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
மேலும், தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சி முடிவு பெற 8 மாதங்களே உள்ள நிலையில், விதிகள் தளா்த்தப்பட்டு மேலும் 30 லட்சம் பேருக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது ஏமாற்று வேலை. இந்த பொய்ப் பிரசாரத்தை பெண்கள் நம்பக் கூடாது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 1500 உரிமைத்தொகை வழங்கப்படும்,. அனைத்து மகளிரும் மன நிறைவு பெறும் வகையில் உரிமைத் தொகை வழங்கப்படும் என கூறினார்.

எனது தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் ஏராளமான கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. பொறியியல், மருத்துவக் கல்லூரிகளும் கொண்டுவரப்பட்டன. நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் சிறந்த கல்வியறவை பெற வேண்டும் என்பதற்காக, பல பல்கலைக்கழகங்களும் தொடங்கப்பட்டன. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெயரில் அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பணிகளை திமுகவினா் முடக்கி வைத்துள்ளனா்.
அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தின் கல்வி வளா்ச்சிக்காக கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு அடித்தளமிடப்பட்டது. ஆனால், கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் கல்வி வளா்ச்சிக்கு ஏதுவும் செய்யப்படவில்லை. தனது தந்தையின் பெயரை சூட்ட வேண்டும் என்பதற்காகவே கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் என்ற அறிவிப்பை முதல்வா் வெளியிட்டுள்ளாா்.
மாணவா் சமுதாயம் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சிக்காலத்தில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்ற 2,818 மாணவா்கள் மருத்துவப் படிப்பை பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனா். இது, அதிமுக அரசின் சாதனையாகும்.
அ.தி.மு.க. ஆட்சியில் மயிலம் தொகுதியில் சிப்காட்டில் காய்கனி பதப்படுத்தும் பூங்கா 1000 கோடி ரூபாயில் கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு விட்டது. அந்த பூங்கா அமைந்து இருந்தால் பல்லாயிரக்கணக்கானோர்க்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். அதுவும் இந்த ஆட்சியில் பறிபோய் விட்டது. மரக்காணத்தில் 1500 கோடி ரூபாயில் குடிநீர் தேவைக்காக கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினேன். ஆனால் அந்த திட்டத்தையும் இந்த அரசு ரத்து செய்து விட்டது.
இப்படிபட்ட மக்கள் விரோத அரசு இருக்க வேண்டுமா? மக்களுக்கு குடிநீர் வாங்குவதை கூட பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு முதலமைச்சர் ஸ்டாலின் ஆவார். ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்தோம். அதை ஸ்டாலின் ரத்து செய்துவிட்டார்.
ஏன் இந்த ஏழை மாணவர்கள் படிக்கக்கூடாதா? அவர்கள் படிப்பது உங்களுக்கு கசக்கிறதா. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாகும். இந்த மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக வருவதற்கு எங்களது அரசு துணை நிற்கும். 2026-ல் மாற்றம் வரும். மக்களுக்கு ஏற்றம் வரும்.
இவ்வாறு பேசினார்.