சென்னை
சென்னை உயர்நீதிமன்றம் நாளை முதல் 4 சுங்கச்சாவடிகளில் தமிழக அரசு பேருந்துகள் செல்ல தடை விதித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்;அ அரசு போக்குவரத்து கழகங்கள் சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.276 கோடியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளதாக கூறி மதுரை கப்பலூர், சாத்தூர் எட்டுர்வட்டம், கயத்தாறு சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கு மனுவில், ‘சுங்கச்சாவடிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி,
“போக்குவரத்து கழகங்கள் நிலுவைத்தொகையை செலுத்தாமல் பிரச்சினையை இழுத்துக்கொண்டே சென்றால் நிலுவைத்தொகை ரூ.300 கோடி, ரூ.400 கோடி என உயர்ந்துவிடும்.
அரசு அதிகாரிகள் இந்த பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொண்டு விரைந்து செயல்படாமல் இருப்பது கவலை அளிக்கிறது. சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்து போக்குவரத்தை நிறுத்தி தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், நிலுவைத் தொகையை வசூலிக்க முடியாத நிலை உள்ளதாக சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
எனவே, கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகள் வழியாக 10-ந்தேதி (நாளை) முதல் தமிழக அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்கக்கூடாது. இந்த சுங்கச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு டி.ஜி.பி. உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்”
என்று உத்தரவிட்டார்.
இதையொட்டி ரூ.276 கோடி சுங்கக் கட்டணம் பாக்கியால் அரசு பஸ்களுக்கு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில்ல் தமிழக அரசுத்தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்கு நாளை (ஜூலை10ம் தேதி) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.