சென்னை
நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 9 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. இது விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவி;ல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனப் பெருமளவிலானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9-ம் தேதி நடைபெறவுள்ள இந்த வேலைநிறுத்தம், தமிழகம் முழுவதும் பொது வாழ்க்கையைப் பாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, அரசுப் போக்குவரத்து சேவைகள், வங்கிப் பணிகள், அரசு அலுவலகச் செயல்பாடுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படலாம் என்பதால், பொதுமக்கள் அதற்கேற்ப தங்கள் திட்டங்களை வகுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தொழிற்சங்கங்களின் இந்த கூட்டுப் போராட்டம், தங்களது நீண்டகால கோரிக்கைகளை அரசு கவனத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு முக்கியமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள 17 அம்சக் கோரிக்கைகளில், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதைக் கைவிடுதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துதல், தொழிலாளர் சட்டத் திருத்தங்களை வாபஸ் பெறுதல் போன்ற பல முக்கிய அம்சங்கள் அடங்கும். இக்கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டங்கள் தொடரும் என தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.