திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற விண்ணதிரும் கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு விண்ணதிர ‘முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா’ என்ற பக்தர்களின் முழக்கங் களுடன் கோபுர தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின் இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் யாகசாலையில், கடந்த 27ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கடந்த 1-ம் தேதி முதல் கோவில் உள்பிரகாரத்தில் மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து தினமும் காலை, மாலை என ஒவ்வொரு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று காலை 12 வது கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றது.