சென்னை: திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார், காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரை காவலர்கள் காட்டு மிராண்டித்தனமாக தாக்கும் வீடியோவை எடுத்த அந்த பகுயைச் சேர்ந்த நபர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தலைவர் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.
அஜித்குமார் மரணத்துக்கு காரணமாக, அவர் போலீசாரால் கடுமையாக தாக்கப்படுவதை வீடியோ எடுத்த சாட்சியான சத்தீஸ்வரன் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் கடந்த 27-ந்தேதி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த நிகித்தா என்பவர் காரில் இருந்து 9½ பவுன் நகைகள் களவு போனது. அந்த நகைகளை கண்டுபிடிப்பதற்காக மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்தின் தனிப்படை போலீசார், கோவில் காவலாளி அஜித்குமாரை 27-ந்தேதி மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதில் தனிப்படை போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதன் தொடர்ச்சியாக சங்கரமணிகண்டன், ராஜா, பிரபு, ஆனந்த், கண்ணன், ராமச்சந்திரன் ஆகிய 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு நேரடியாக சம்பவ இடங்களில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். அப்போது அஜித்குமாரை அடித்துக் கொன்றதாக புகார் தெரிவித்த மக்கள் சம்பந்தப்பட்ட போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த கொலையை, காவல்துறையினர் வலிப்பு வந்து அஜித்குமார் உயிரிழந்ததாக எஃப்ஐஆர் பதிவு செய்த நிலையில், அஜித்குமாரை கடுமையாக தாக்கிய வீடியோ வெளியாகி உண்மையை உலகுக்கு அம்பலப்படுத்தியது. அந்த வீடியோ நாடு முழுவதும் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக அரசையும், தமிழ்நாடு காவல்துறையையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.

மேலும் வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றமும், காவல்துறையையும், அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தது. மேலும், வீடியோ எடுத்த சத்திஸ்வரன் என்ற நபரையும் விசாரித்தது.
இந்த நிலையில், திருப்புவனம் இளைஞர் அஜித் மரண வழக்கின் முக்கிய சாட்சியான சத்தீஸ்வரன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் என டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். தனக்கும், தனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் வருவதாக வீடியோ எடுத்த சத்தீஸ்வரன் புகார் மனு அளித்துள்ளார். மேலும், கைதான காவலர் ராஜா, சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்மூலம் தனக்கு மிரட்டல் வருவதாகவும் மனுவில் குற்றம் சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக டிஜிபிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் “அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சி கூறியதை தொடர்ந்து, போலீஸுடன் தொடர்பில் உள்ள ரெளடிகள் தனக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். கைதான காவலர் ராஜா என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவருடன் தொடர்பில் உள்ளார். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஆகையால், எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். உள்ளூர் அல்லாமல் வெளிமாவட்ட போலீசார் மூலம் பாதுகாப்பு தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தக் கடித நகலை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு பதிவாளருக்கும், தென்மண்டல ஐஜிக்கும் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தையே உலுக்கியுள்ள வழக்கின் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்குமார் உடலில் 44 காயங்கள்: விசாரணையை தொடங்கினார் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்