சிவசங்கை: போலீசாரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலில் 30 காயங்கள் இருந்தது,  அவரது உடற்கூறாய்வு அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, 5 காவல்துறையினர் கைது செய்யப்பட்டுசிறையுல் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அஜித்குமார்  போலீசாரிடம் இருந்து தப்பிக்கும்போது வலிப்பு வந்து உயிரிழந்துள்ளதாக எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை போலீசார் கடுமையாக அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இது காவல்துறையினரின் மனசாட்சியின்மையையும், அவர்களின் கோரமுகத்தையும் வெளிக்காட்டுகிறது.

இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில், சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய தந்தை மகன் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது  சிவகங்கை திரும்புவனம் பகுதியில்  விசாரணைக்கு அழைத்து சென்ற நபரை  காவல்துறை கடுமையாக கொடூமைபடுத்தி கொலை செய்துள்ளது. இந்த லாக்கப் மரண  மரண வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அஜித் உயிரிழந்தது தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி வேங்கட பிரசாத் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தாசில்தார், ஆர்டிஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நீதிபதி முன் ஆஜராயினர். பின்னர் பெற்றோரின் சம்மதத்துடன் அஜித்தின் உடலை உடற்கூறாய்வு செய்து, குடும்பத்திடம் ஒப்படைக்க இருப்பதாகக் கூறி அவரின் குடும்பத்தினரை அழைத்துச் சென்றனர்.

அஜித் குடும்பத்தினரை காவல்துறையினர் அழைத்து செல்லும் போது அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் கிராம இளைஞர் சபையினர் உள்ளிட்டடோர் அஜித்தை தாக்கிய காவலர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

உடற்கூறாய்வு அறிக்கையில் இருப்பது என்ன?

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அஜித்குமாரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அங்கே வழக்கமாக ஒரு பிரேத பரிசோதனை 1 முதல் 2 மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால், அஜித்குமாருக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை 5 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூடற்கூராய்வு அவரது உடலில் அசாதாரண அளவிலான தாக்கங்கள் மற்றும் காயங்கள் இருந்ததை உறுதி செய்கிறது.

அதன்படி, குறைந்தது 18 வெளிப்புற காயங்கள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மண்டையோடு தொடங்கி, கை, முதுகு, கால்கள் என அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன. உள்ளுறுப்புகளிலும் பலவிதமான காயங்கள், ரத்தக்கசிவு போன்ற மரணத்துக்குக் காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட தீவிர காயம் உயிரிழப்புக்கு நேரடியான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக்கசிவு போன்றவை கூட மரணத்துக்கு வழிவகுத்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் அஜித் குமார் விசாரணையின் போது போலீசாரால் தாக்கப்பட்டார் என்று குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூலை 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து, அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரை போலீஸார் கடுமையாக தாக்கி கொலை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் உடலை வாங்க மறுத்த அவர்களிடம் போலீஸார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். பின்னர் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விசாரணையின்போது அஜித்குமாரை போலீஸார் கடுமையாக தாக்கியது பிரேதப் பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது. அவரது உடலில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸார் வழக்கு பதிந்தனர். மேலும், தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் பணியிடை நீக்கம் செய்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஆறு காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, காவலாளி அஜித்குமார் விஷயத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அவரது தம்பி நவீன் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

இந்த வழக்கில்  உயிரிழந்த அஜித் குமாருடன்  அவரது  சகோதரர் நவீன் குமாரும், காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அவரையும் காவல்துறையினர் கடுமையாக தாக்கி உள்ளனர். இதுருகுறித்து,  தகவலறிந்ததும் அஜித்தின் தாய்,   திருப்புவனம் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்து பேசிய போது நகையை தான் திருடவில்லை என்று அஜித் தன்னிடம் கூறியதாக  அவரது தாயார் மாதவி தெரிவித்தார்.

திருப்புவனம் காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு அஜித் குமாரை மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை (ஜூன் 28) மாலை சுமார் 6 மணி அளவில் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து காவல்துறை நடத்திய விசாரணையின் போது அஜித்குமார் கடுமையாக தாக்கப்பட்டதை பார்த்ததாக அப்பகுதியைச் சேர்ந்த  பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரின் தாக்குதலில் மயக்கம் அடைந்த அஜித்தை  காவல்துறையினர்  மாட்டுத் தொழுவத்தில் இருந்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், அஜித் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்திய பிறகு அஜித்தின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த  அஜித்குமாரின் உறவினர்களும் மடப்புரம் கிராம மக்களும் சனிக்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து அங்கே வந்த சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷீஷ் ராவத் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஜித்குமாரின் உறவினர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அஜித்குமார் உயிரிழந்து விட்டதை அவரது குடும்பத்தினரிடம் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் உறுதிப்படுத்தினார். இதனால் பதற்றம் அதிகரித்ததால் திருப்புவனம் காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். அஜித்குமாரின் சொந்த ஊரான மடப்புரத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து, அஜித் குமாரின் சகோதரர் நவின்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது,   “எனது அண்ணன் அஜித்தை போலீசார் கோவிலுக்கு பின்புறம் அழைத்துச் சென்றபோது அவன் நடந்துதான் சென்றான். ஆனால் திரும்பும் போது அவனை தூக்கிக் கொண்டு வந்தனர்,”

 “வெள்ளிக்கிழமை மதியம் எனது அண்ணன் அஜித்குமார் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் காரில் இருந்த தங்க நகையை திருடியதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அஜித்துக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால் சாவியை அஜித்தின் நண்பர்கள் அருண்குமார், வினோத் குமார் ஆகியோரிடம் கொடுத்து காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வருமாறு கூறியுள்ளார். ஆனால் காரை எடுத்து சென்ற இருவரும் வெகு நேரமாக காரை பார்க்கிங்கில் நிறுத்தாமல் நீண்ட தூரம் ஓட்டிச் சென்றுள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகு தான் காரை அவர்கள் கொண்டு வந்து கொடுத்துள்ளனர். கேட்டதற்கு பார்க்கிங்கில் இடமில்லாததால் வெகு தூரம் சென்று காரை நிறுத்தி இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அஜித் போலீசாரிடம் கூறியதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு மானாமதுரை குற்றப்பிரிவு காவல் துறையினர், நான் மற்றும் பிரவீன்குமார், அருண்குமார், வினோத் குமார், அஜித் குமார் 5 பேரையும் மடப்புரம் அருகே உள்ள கண்மாய் கரை உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்,” என்றார்.

காவல்துறையினர் தங்களை கடுமையாக தாக்கியதாகக் குற்றம்சாட்டிய அவர், “அஜித்தை இரண்டு நாட்களாக தொடர்ந்து அடித்தால் அவனுக்கு காயம் அதிகமாக இருந்தது,” என்று கூறினார்.

“காரை ஓட்டி சென்ற அருண்குமார், வினோத் குமாரை காவல்துறையினர் தனித்தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். ஆனால் அவர்கள் காருக்குள் இருந்த நகையை பார்க்கவில்லை என கூறியதால் ஒரு கட்டத்தில் போலீசார் யாருக்கோ போன் செய்து காரில் நகை இருந்தது உண்மைதானா என கேட்டனர். அதற்கு அவர்கள் 10 பவுன் தங்க நகை இருந்தது என கூறியதை அடுத்து மீண்டும் அஜித்தை போலீசார் சனிக்கிழமை காலையில் இருந்து கடுமையாக அடித்தனர்.

அடி தாங்காமல் இறுதியில் அஜித், தான் அந்த நகையை திருடியதாகவும், அந்த நகையை கோவில் பின்புறம் உள்ள கோவில் அலுவலகத்தின் பின்னால் உள்ள மாட்டு தொழுவத்தில் மறைத்து வைத்திருப்பதாக சொன்னான். மடப்புரம் கோவில் பின்புறம் எங்கள் அனைவரையும் அழைத்து சென்றனர். எங்கள் நால்வரையும் வேனில் இருக்க வைத்து விட்டு 3 காவலர்கள் அஜித்தை மட்டும் அழைத்து சென்றனர்.

காவல் நிலையத்தில் வைத்து ஏற்கனவே போலீசார் கடுமையாக தாக்கியிருந்ததால் அஜித் மிகவும் கஷ்டப்பட்டு நடந்து சென்றான். சிறிது நேரத்திற்குப் பின் போலீசார் அஜித்தை தூக்கி கொண்டு மற்றொரு வாகனத்தில் சென்றதை பார்த்தேன்.” என்று கூறினார். இதைத் தொடர்ந்து, தாம் உள்பட மற்ற நால்வரையும் வேனில் இருந்து இறங்கிச் செல்லுமாறு காவல்துறை கூறியதாக நவீன்குமார் தெரிவித்தார்.

“நான் வீட்டிற்குச் சென்று நடந்ததை கூறிய பின் குடும்பத்துடன் காவல் நிலையம் சென்று கேட்டதற்கு அஜித் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்,” என்றார் நவீன் குமார்.

மகனை இழந்த வேதனையில் இருக்கும்  அவரது தாயார் மாதவி கூறும்போது,  “இன்னொரு மகனுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் நிரந்தர அரசு பணி வழங்குவதாகவும், நிதி உதவி வழங்குவதாகவும் கூறுகின்றனர். இதை கொடுத்தால் என் மகன் உயிருக்கு ஈடாகுமா? அவன் திரும்பி வருவானா?” என்று கேள்வி எழுப்பினார்.

திருபுவனம் போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையால் அப்பாவி ஒருவர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து, அதிமுக, பாமக, , நாம் தமிழர் கட்சி, தவெக உள்பட பல கட்சிகளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளன.

அஜித்குமார்  போலீசாரிடம் இருந்து தப்பிக்கும்போது வலிப்பு வந்து உயிரிழந்துள்ளதாக எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை போலீசார் கடுமையாக அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இது காவல்துறையினரின் மனசாட்சியின்மையையும், அவர்களின் கோரமுகத்தையும் வெளிக்காட்டுகிறது.

நன்றி: வீடியோ உதவி புதிய தலைமுறை