மேட்டூர்:  கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால்,.மேட்டூர் அணை  44வது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.

கர்நாடக மாநிலத்தில், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக, மேட்டூர் அணை92 ஆண்டு கால வரலாற்றில், 44வது ஆண்டாக நள்ளிரவு  முழு கொள்ளவான 120 அடியை எட்டியது. அதுபோல, அணையின் வரலாற்றில்,   ஜூன் மாதத்தில் 66 ஆண்டுக்கு பிறகு 2வதாகவும், முழுமையாக நிரம்பி 120அடியை எட்டியது.  மேலும்,  தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120அடியை எட்டி, உபரி நீர் வெளியேற்றப் படுவதால், சேலம் மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் விவசாய உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில்,   அணையின் வலது கரையில் அமைச்சர் ராஜேந்திரன், சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி மற்றும் அதிகாரிகள், காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி, கூடுதலாக வரும் வெள்ள நீர், மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்டது.  இதனால், 11 மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்,  மேட்டூர் அணையில் இருந்து, பிரதான நீரேற்று நிலையமான திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு 356 கனஅடி நீரை அமைச்சர் ராஜேந்திரன் மின்விசையை இயக்கி திறந்து வைத்தார்.

உபரிநீர் திறப்பு காரணமாக, மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி பகுதியில் உள்ள தங்கமாபுரிபட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர், வஉசி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 58,000 கனஅடியாக இருந்து வருகிறது. அதே வேளையில் அணையில் இருந்து,  காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 26,000 கனஅடி நீரும், உபரிநீராக விநாடிக்கு 32,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.  நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால், அணையின் வலது கரையிலும், இடது கரையிலும் நீர்வளத்துறை அதிகாரிகளும், பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உபரிநீர் போக்கி வழியாக விநாடிக்கு 32,000 கனஅடி நீர் திறக்கப்படுவதாலும், மேலும் நீர் திறப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதாலும், காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தின் அருகே, கரை ஓரத்தில் நின்று செல்பி எடுப்பது, கால்நடைகளை குளிக்க வைப்பது, துணி துவைப்பது, ஆற்றில் குளிப்பது போன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 78ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 4மணி நிலவரப்படி விநாடிக்கு 50,000 கனஅடியாக சரிந்தது. எனினும் அங்குள்ள மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி பகுதிகளில் பாறைகளை மூழ்கடித்தபடி புது வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

வெள்ளப்பெருக்கு காரணமாக, ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க, நேற்று 10வது நாளாக தடை நீடிக்கிறது. மேலும் ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைபாதை மூடப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.