டில்லி: சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர்,  கேப்டன் சுபான்ஷூ சுக்லா, விண்வெளியில் இருந்து வெப்கேஸ்ட் மூலம் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அதில் , “சுபன்ஷு சுக்லாவுடனான பிரதமர் மோடியின் உரையாடல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) உள்ள முழு குழுவினரையும் உற்சாகப்படுத்தியது மட்டுமல்லாமல், முழு இஸ்ரோ குழுவிற்கும் மிகப்பெரிய உந்துதலாகவும் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான ‘இஸ்ரோ’  இணைந்து உருவாக்கிய ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 என்ற திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் ஜூன் 25 அன்று  சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணமாகினர். சுமார் 28 மணி நேர பயணத்துக்கு பிறகு அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர். அதன்படி ஜூன் 26  மாலை 4:30 மணிக்கு சென்றடைந்தனர். இவர்கள் . அங்கு 14 நாட்கள் தங்கியிருந்து, ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர்.

விண்வெளி நிலையம் சென்றடைவதற்கு முன்பு,  விண்கலத்தில் இருந்தபடி இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசினார். இது பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்து வரும் சுக்லா, நேற்று மாலை (ஜுன் 28ந்தேதி)  பிரதமர் மோடியுடன் வெப்கேஸ்ட் நேரலை அழைப்பில் கலந்துரையாடினார்.  அவருடன் பேசிய  பிரதமர் மோடி ,  இன்று நீங்கள் தாய் மண்ணில் இருந்து வெகுதூரத்தில் உள்ளீர்கள். ஆனால், இந்தியர்களின் மனதுக்கு நெருக்கமானவராக மாறிவிட்டீர்கள். உங்கள் பெயரில் சுபம் உள்ளது.உங்கள் பயணம் ஒரு புதிய சகாப்தத்தின் துவக்கமாகும்,

விண்வெளியில் நமது தேசியக்கொடியை ஏந்தியதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த பயணம், விண்வெளி தேடலுக்கான நமது மாணவர்களின் உறுதியை வலுப்படுத்தும். இந்த நேரத்தில் நாம் இரண்டு பேர் மட்டும் தான்பேசிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் 140 கோடி இந்தியர்களும் பேசுவதை போல் உணர்கிறேன். எனது குரல், இந்தியர்களின் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொண்டுள்ளது.
நீங்கள் விண்வெளிக்கு வெளியே இருக்கின்றீர்கள். அங்கு புவியீர்ப்பு விசை இருக்காது. ஆனால், நீங்கள் எவ்வளவு பணிவானவர் என்று ஒவ்வொரு இந்தியரும் பார்த்து வருகின்றனர். கேரட் அல்வாவை எடுத்துச் சென்றீர்களளே. அதனை சக விண்வெளி வீரர்களுடன் பகிர்ந்து கொண்டீர்களா? என கூறினார்.

இதையடுத்து பேசிய  சுபான்ஷூ சுக்லா , உங்களின் வாழ்த்துக்காகவும், 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்காகவும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது வரைபடத்தை விட இந்தியா பிரமாண்டமாகவும், பெரியதாகவும் தெரிகிறது. இங்கு நான் நலமுடன் பத்திரமாக இருக்கிறேன். நன்றாக உணர்கிறேன். புதிய அனுபவமாக இருக்கிறது. இந்த பயணம் எனக்கானது அல்ல. ஒட்டுமொத்த நாட்டுக்கானது. உங்கள் தலைமையின் கீழ், இன்றைய இந்தியா, தனது கனவை நிறைவேற்ற பெரிய வாய்ப்புகளை பெற்றுள்ளது. நமது தேசம், மிக வேகத்தில் முன்னேறி வருகிறது. நான் சிறுவனாக இருந்த போது, விண்வெளி வீரனாக ஆவேன் என நினைத்து பார்த்தது இல்லை. நீங்கள், இந்தியர்களை பிரதிநிதித்துவபடுத்துவதில் பெருமை அடைகிறேன்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பூமியில் இருந்து நான் என்னுடன் கேரட் அல்வா, பாசிபருப்பு அல்வா ஆகியவற்றை கொண்டு வந்துள்ளேன். மற்ற நாடுகளில் இருந்து என்னுடன் வந்திருக்கும் அனைவருக்கும் இந்த செழுமையான இந்திய சமையல் ருசியை அனுபவிக்க வேண்டும் என எண்ணினேன். அனைவரும் ஒன்றாக சாப்பிட்டோம். அனைவருக்கும் பிடித்து இருந்தது.

சற்று நேரத்திற்கு முன்பு, விண்வெளி மையத்தில் இருந்து பூமியை பார்த்த போது, ஹவாய் தீவு மேலே பறந்து கொண்டு இருந்தது தெரியவந்தது. சுற்றுப்பாதையில் இருந்து தினமும் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை 16 முறை பார்க்கிறோம்.

இந்த திட்டமானது நமது நாட்டிற்கு ஒரு துவக்கம் தான். விரைவில் நமக்கு என்று தனியாக விண்வெளி நிலையம் கிடைக்கும். நாங்கள் பல நெருக்கடியான சூழ்நிலைகளை சந்திக்கிறோம். ஆனால் மனநிறைவு எங்களை அமைதியாக இருக்க உதவுகிறது. நீங்கள் அமைதியாக இருக்கும்போது, சிறந்த முடிவை எடுக்க முடியும்.

இவ்வாறு சுக்லா கூறினார்.