குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஜெகன்னாத் ரத யாத்திரையின் போது யானைக்கு மதம் பிடித்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.
ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெறுவது போல் அகமதாபாத் நகரிலும் ஜெகன்னாத் ரத யாத்திரை ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய பூஜையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டதை அடுத்து குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் பஹிந்த் காலை 7 மணிக்கு ரத யாத்திரையை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
அதற்கு முன்னதாக ரத யாத்திரை செல்லும் பாதையை தங்கத்தாலான துடைப்பத்தைக் கொண்டு சுத்தம் செய்யப்படும் சடங்கு நடைபெற்றது.
இந்த யாத்திரையில் 17 யானைகள் அணிவகுத்து சென்ற நிலையில் அதில் மூன்று யானைகள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தில் ஓடியது.

இதனால் ரத யாத்திரையைப் பார்க்க வந்த மக்கள் அங்குமிங்கும் தலைதெறிக்க ஓடியதை அடுத்து அங்கு சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து வனத்துறையினர் அந்த யானையை கட்டுப்படுத்தி ஊர்வலத்தில் இருந்து அப்புறப்படுத்தியதை அடுத்து 14 யானைகளுடன் ரத யாத்திரை தொடர்ந்து வருகிறது.
இரவு 8:30 மணி வரை ரத யாத்திரை நடைபெற உள்ளதை அடுத்து இதைக் காண ஏராளாமான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.