சென்னை: முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணா குறித்த வீடியோ வெளியிடப்பட்டதற்கு அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே எடப்பாடி உள்பட அதிமுக தலைவர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்த நிலையில், தற்போது ஆர்பி. உதயகுமாரும் கண்டனம்தெரிவித்துள்ளனர்.

மதுரையில் வெற்றிகரமாக நடைபெற்ற முடிந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணா குறித்த வீடியோ வெளியிடப்பட்டதற்கு திமுக, அதிமுக கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளன. இந்த மாநாட்டில் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்ட நிலையில், அவர்களை குறிவைத்து திமுக கடுமையாக விமர்சனங்களை வைத்தது.
இதையடுத்து, இன்று அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து வெளியிடப்பட்ட வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். அதில், “முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். அறிஞர் அண்ணாவின் மாற்றான் தோட்ட மல்லிகைக்கும் மனமுண்டு எனும் கூற்றின் அடிப்படையிலும், முருக பக்தர்கள் என்ற அடிப்படையில்தான் மாநாட்டில் பங்கேற்றோம். அதில் அரசியல் இருக்காது என்று நம்பினோம்.
ஆனால், மாநாட்டில் ஒளிப்பரப்பட்ட வீடியோவில் பெரியார், அண்ணாவை அவதூறு செய்ததாகத் தகவல் வந்துள்ளது. அ.தி.மு.க ஒரு நாளும் கொள்கையை, கோட்பாட்டை, லட்சியத்தை விட்டுக் கொடுக்காது. அண்ணாவை, ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதற்காகக் கடந்த காலத்தில் என்ன முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
தி.மு.க போல எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு ஆட்சி அதிகாரத்தை எடப்பாடி பழனிச்சாமி தக்க வைக்க மாட்டார். பா.ஜ.க-வுடன் கூட்டணியிலிருந்த போது மக்களுக்குத் தேவையான திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி கேட்டுப் பெற்றுத் தந்துள்ளார். தற்போது மக்கள் நலனுக்காக பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்துள்ளது. மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கும் அ.தி.மு.க-வுக்கும் சம்பந்தம் இல்லை.
நாங்கள் அந்த வீடியோ ஒளிப்பரப்பட்டதைப் பார்க்கவில்லை. திரைக்குப் பின்புறம் அமர்ந்து இருந்ததால் பார்க்க முடியவில்லை. பெரியார், அண்ணா குறித்த அவதூறு கருத்துக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாநாட்டின் தீர்மானம், உறுதிமொழிகளை அ.தி.மு.க ஒரு போதும் ஏற்காது” என்றும் தெரிவித்துள்ளார்.