மதுரை :  தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமான இடங்களில் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படும் கடைகள், மற்றும்  வணிக நிறுவனங்களுக்கு   9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும்  வகையில்  தமிழ்நாடு அரசு  வெளியிட்ட அரசாணைக்கு  உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சொந்தமான  இடங்களில் கட்டப்பட்டுள்ள கடைகள்  9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடும் தமிழ்நாடு அரசின்  அரசாணைக்கு உயர் நீதிமன்ற அமர்வு இடைக்காலத் தடை விதித்து  உத்தரவிட்டது.

 காரைக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக மே 26-ல் மாநகராட்சி ஆணையர் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிட்டார். இதேபோல் பிற மாநகராட்சிகளிலும் கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து, காரைக்குடியை சேர்ந்த சிவராஜ், உயர் நீதிமன்ற அமர்வில்  வழக்கு தாக்கல் செய்தார். அவரது மனுவில், அரசின் இந்த உத்தரவு,  தமிழக ஊரக உள்ளாட்சி விதிகளுக்கு எதிரானது. தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி விதிகளின்படி 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அரசுக்கு சொந்தமான இடம் அல்லது கட்டிடத்தை குத்தகைக்கு வழங்க முடியும். ஒரே நபருக்கு மீண்டும் குத்தகைக்கு வழங்கவோ, குத்தகைக் கால நீடிப்பு வழங்குவதோ கூடாது.

பல்வேறு ஏழை வியாபாரிகள் தொழில் நடத்த வாடகைக் கடைகளை தேடும் சூழலில் மாநகராட்சி, நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை 9 ஆண்டுகள் குத்தகைக்கு விடுவது ஏற்புடையதல்ல. அதேபோல் கடைகளை ஏற்கெனவே நடத்தி வருவோருக்கு குத்தகை நீட்டிப்பு வழங்குவதும் சட்டவிரோதம். எனவே, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை 9 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக தமிழக நகராட்சி நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலர் பிறப்பித்த அரசாணையை சட்டவிரோதம் என அறிவித்தும், அந்த அரசாணை அடிப்படையில் ஏற்கெனவே உள்ள கடைகளின் குத்தகை உரிமத்தைப் புதுப்பிக்கவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், மாநகராட்சி, நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை 9 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடுவது தொடர்பாக தமிழக நகராட்சி நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலர் பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தும், மனு தொடர்பாக நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலர், இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டும் விசாரணையை ஒரு வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.