நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை சிபிஐ கைது செய்துள்ளது.
நீட் தேர்வு விவகாரம் ஆரம்பம் முதலே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வரும் நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களை குறிவைத்து ஒரு மோசடி கும்பல் செயல்பட்டு வந்துள்ளது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பல் மருத்துவர் ஒருவரை கைது செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில், 90 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு அதிக மதிப்பெண் பெற்றுத்தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
NTA அதிகாரிகள் உதவியுடன் தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாகவும் தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அந்த மாணவர்களின் திருத்தப்பட்ட அதிக மதிப்பெண்கள் என்ன என்பதை தெரிவிப்பதாகவும் கூறி மாணவர்களின் பெற்றோர்களை மோசடி நபர்கள் நம்பவைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது வெளியான நிலையில் இதுதொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் தேசிய தேர்வு நிறுவனம் (NTA)-விடமும் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது.