மதுரை: இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி, மதுரையில் கவர்னர் தலைமையில் பலஆயிரம் பேர் கலந்துகொண்ட பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்று காலை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாட்டில், திமுக அரசு, உலக யோகா தின நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டாத நிலையில், மாநில கவர்னர் ஆர்.என்.ரவி, பொதுமக்கள் யோகா தினத்தை சிறப்பிக்க வேண்டும் என்றும், அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று கவர்னர் கேட்டு கொண்டார். அதன்படி இன்று மதுரையில் கவர்னர் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகம் முழுவதும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் ஒரே நேரத்தில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தனிநபரின் ஆரோக்கியம், சர்வதேச நிலைதன்மை என்ற உயர்நிலையை யோகா கொண்டிருக்கிறது என்ற செய்தியை பிரதிபலிக்கும் வகையில் ‘ஒரே புவி, ஒரே ஆரோக்கியம்’ என்ற கருத்தாக்கத்தின் கீழ் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தின் முக்கிய நிகழ்வு, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய ஆயுஷ் துறை மற்றும் சுகாதாரத் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் குடியரசு தலைவர் முர்மு உள்பட பல மாநில முதல்வர்கள், மத்திய மாநிலஅமைச்சர்கள் என அனைத்து தரப்பினரும் உலக யோகா தினத்தை சிறப்பித்து வருகின்றனர்.
உலக யோகா தினம் அறிவிக்கப்பட்டு, 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை குறிக்கும் வகையில், இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா என்று கொண்டாடப்படுகிறது. இந்த 11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று கவர்னர் ஏற்கனவே கேட்டு கொண்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு கவர்னர் மாளிகை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, 2025 சர்வதேச யோகா தின நிகழ்விற்காக நிறுவனங்கள், மையங்கள், அமைப்புகள், நிர்வாக துறைகள், கிராமங்கள், வேளாண் அறிவியல் மையங்கள், விவசாயிகள், மீனவர்கள், கைவினைஞர்கள் தவிர பிற பிரிவுகள் உள்பட பல்வேறு துறைகளிலும் பரவலான பங்கேற்பை செயல்படுத்த, ஒரு பிரத்யேக https://events.annauniv.edu/ என்ற இணையவழி சேவையை தொடங்கி யது. அதனப்டி, யோகா பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்கள் விவரங்களை, இணையவழி வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை மதுரையில் பிரமாண்டமாக யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி மதுரையில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ஏற்பாடு செய்த பிரமாண்டமான யோகா நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி யோகா அமர்வில் பங்கேற்றார். இதில் பல ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.