சென்னை: யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை  வழங்குவது தொடர்பாக  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

2025-ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் (25.05.2025) தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 25,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின்கீழ், மத்திய, மாநில, தேசிய, சிவில் சர்விஸ் என அனைத்து வகையான தேர்வுகளை எதிர்கொள்ள இலவச பயிற்சி மற்றும் இலவசமாக தங்கி படிக்கும் வசதியும் செய்து வருகிறது. இதன்மூலம் ஏராளமான மாணவர்கள் பயிற்சி பெற்று தேசிய அளவிலான தேர்வுகளில்  வெற்றிபெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். சமீபத்தில் சிவில்சர்விஸ் தேர்வில் இதுவரை இல்லாத அளவில் எராளமானோர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்ததார்.

நடப்பாண்டில் நடைபெற்ற யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகி வரும் சூழலில் தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப்பிரிவானது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் 2023-24க்கான தமிழ் நாடு அரசின் பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அகில இந்திய குடிமைப் பணி தேர்வு மையத்துடன் (AICSCC) இணைந்து, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளைச் செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் பயின்று வரும் 1,000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும்.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து. 2025ஆம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் (25.05.2025) தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக 25,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2025) யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையைப் படித்து பார்த்து 21.06.2025 முதல் 02.07.2025 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.