ஒகனேக்கல்: கனமழை காரணமாக  கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக, கேரளா, கர்நாடக உள்பட மேற்குதொடர்ச்சி மலையோரப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளதால், கபினி, கிருஷ்ணசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் ஒகனேக்கல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

 கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்வரத்து 700 கன அடியாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  இன்று காலை முதல் ஓகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 17,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், ஆற்றிலும், நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதனால், கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல் பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள், மெயின் அருவி, சினி அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கர்நாடக அணைகளில் இருந்து மேலும் அதிக அளவிலான  தண்ணீர் திறக்கப்பட்டும் வாய்ப்பு இருப்பதால் ஒகனேக்கல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மக்களின் பாதுகாப்பைக் கருதியும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.