சென்னை:  பள்ளி சிறுமி உயிரிழந்த விவகாரத்தையொட்டி,  சென்னை நகருக்குள் கனரக வாகனங்கள் வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.  இந்த கட்டுப்பாடுகளை மாநகர காவல்ஆணையர் அருண் அறிவித்து உள்ளார்.

அதன்படி,   காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்றும், மீறி கனரக  வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றும்  சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு அளித்துள்ளார்.

பெரம்பூரில் லாரி ஏறி 10 வயது பள்ளி சிறுமி சௌமியா உயிரிழந்ததை அடுத்து, நடவடிக்கையை துரிதப்படுத்தி உள்ளார்.

சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த யாமினி. இவர் தன்னுடைய மகளான 10 வயதுடைய சிறுமி சௌமியாவை பள்ளியில் விடுவதற்காக பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது, சாலையில் இருந்த பள்ளத்தைக்கண்டு  யாமினி சடனே பிரேக் பிடித்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து சிறுமி தவறி கிழே விழுந்துள்ளார்.

அப்போது பின்னால் வந்துகொண்டிருந்த சென்னை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்த லாரி மோதி சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கண் முன்னே மகளை பறிகொடுத்த தாய் கதறி அழுதார். இதனைகண்டு சுற்றி இருந்தவர்களும் கண் கலங்கினர். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து சென்னை மாநகருக்குள் கனரக வாகனங்கள் வந்து செல்ல குறிப்பிட்ட நேரத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.