சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 16ஆவது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Ambattur Industrial Estate Manufacturer’s Association (AIEMA) சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி இன்று முதல் (19.06.2025) முதல் 23.06.2025 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட உள்ள 16 லட்சம் பெண் தொழிலாளர்களில், 6 லட்சம் பெண் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்” என்றும், இந்தியாவில் பதிவு செய்த பெண் தொழிலாளர்களில் 42 விழுக்காடு தமிழகத்தை சேர்ந்தவர்கள். தொழிற்சாலையில் அதிகளவில் பெண்கள் பணிபுரியும் மாநிலங்களில் தமிழகமே முதலிடத்தில் உள்ளது என தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில், கடந்த ஆண்டு 435 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இவ்வாண்டு 468 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், இந்தியாவின் உற்பத்தி துறையின் மொத்த உற்பத்தியில் 11.9 சதவீதம் தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளது.
“திராவிட மாடல் ஆட்சியில் தொழில் துறை மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. 14 தொழிற்பேட்டைகளை உருவாக்கியுள்ளோம்; இன்னும் உருவாக்கவுள்ளோம். மோட்டார் வாகனம், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. பதிவு செய்யப்பட்ட சிறு, குறு தொழில்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 3ம் இடம் பிடித்துள்ளது.
ஜவுளி இயந்திரங்கள், மின்னணு பொருட்கள் உற்பத்தியில் 2வது இடத்தில் உள்ளது தமிழ்நாடு. இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 11.9%ஆக உள்ளது. இந்தியாவில் உள்ள 14.90 லட்சம் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களில் 6.30 லட்சம் பேர் பெண்கள். நாட்டில் உள்ள மொத்த பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 41% பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் தொழில் முனைவோரில் பெண்களின் பங்கு 30 விழுக்காடு. 2021ம் ஆண்டு முதல் ஏற்றுமதிகளை அதிகரித்து வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. தொழில் வளர்ச்சி, தொழில் துறை, தொழிலாளர் நலனின் தேவையை கவனித்து செயல்படுகிறோம்.சுயவேலை வாய்ப்பு திட்டத்தில் 9,915 தொழில்முனைவோருக்கு ரூ.2,031 கோடி மானியத்துடன் ரூ.5,200 கோடி கடன் வழங்கியுள்ளோம்.
வேளாண்மைக்கு அடுத்த நிலையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் 42,278 பேருக்கு ரூ.7,538 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மீதும் சென்னை மீதும் உலக நிறுவனங்கள் வைத்த மதிப்பின் வெளிப்பாட்டால் கண்காட்சியில் பங்கேற்பபோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொழில் வளர்ச்சி, தொழிலாளர் நலனுக்கு தி.மு.க. அரசு முக்கியமான பணிகளை செய்துள்ளது. MSME-க்கு என தனிப்பட்ட பாலிசி, 4 ஆண்டில் மின் மானியம், ஊதிய மானியம் என ரூ.1000 கோடிக்கு மு மேல் மானியம் தரப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட குறு, சிறு, தொழில்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 3-ம் இடத்தில் உள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைவு
தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தின் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன. தொடர்ந்து ஏற்றுமதி விகிதம் அதிகரித்து வரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
இவ்வாறு கூறினார்.