கோவை: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2022ம் ஆண்டு நடைபெற்ற கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில், அங்குள்ள இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றி வந்த  கோவை அரபிக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர் என இருவரை என்ஐஏ கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த, அரபிக் கல்லூரி முதல்வர் அகமது அலி, அந்தக் கல்லூரியின் ஊழியர் ஜவஹர் சாதிக் ஆகிய இருவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

ஏற்கனவே, இந்த கார் குண்டுவெடிப்புக்கு கோவை அரபுக் கல்லூரியின் ஆசிரியர் ஹனிஃபா நிதியுதவி அளித்ததையும் மத்திய பயங்கரவாத தடுப்பு விசாரணை நிறுவனம் கண்டறிந்து அவரை கைது செய்த நிலையில், தற்போது, அரபிக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர் என  2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இஸ்லாமியர்கள் நடத்தி வரும் அரபி பள்ளிகள், மற்றும்  கல்லூரிகளில்  படித்து வரும் மாணவ மாணவிகளிடையே இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்கள் செய்யப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், அதை உறுதி செய்யும் வகையில், கோவை அரபிக் கல்லூரியின் முதல்வராக இருந்த அகமது அலி, ஜவஹர் சாதிக்  ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி  உக்கடம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கோவையில் கார் குண்டுவெடிப்பு நடைபெற்றது.  மேலும், காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டன.

 இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில்,  உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் ஸ்பாட்டிலேயே உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர்,  கார் வெடிப்பு தொடர்பாக காவல்துறையினர் நடத்திவந்த புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

 இதையடுத்து, ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்டபோது காவல்துறையினர், சுமார் 75 கிலோ வெடி மருந்துகள், ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளையும் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், ஜமேசா முபின் உடன் தொடர்பில் இருந்த பலர் அடுத்தடுத்து வேட்டையாடப்பட்டனர். அவர்கள் பல இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வழக்கில், மேலும் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகியோரையும் கைது செய்தனர்.  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர்.

அந்த விசாரணையின் போது, அரபிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை மூளைச்சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு அனுப்ப முயன்றது தெரியவந்தது.  இது தொடர்பாக தனியாக வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர், ஜமீல் பாஷா, முகமது உசேன் இஸ்ரத், சையது அப்துல் ரகுமான் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இந்த கார் குண்டுவெடிப்புக்கு எப்படி நிதியுதவி செய்யப்பட்டது என்பதையும் மத்திய பயங்கரவாத தடுப்பு விசாரணை நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாக ஜவஹர் சாதிக், அகமது அலி ஆகிய இருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள NIA அலுவலகத்தில் இந்த விசாரணையானது நடைபெற்று வந்தது. விசாரணைக்குப் பின்னர் இருவரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். அதுபோல சென்னையில் 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்ட அகமது அலி கோவை அரபிக் கல்லூரியின் முதல்வராக இருந்து வருகிறார். ஜவகர் சாதிக் அரபிக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரையும் இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ள நிலையில் கைது எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னை அழைத்துச்சென்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அகமது அலி (போடநூர், திருமரை நகர்), ஜவஹர் சதிக் (உக்கடம் அருகே புல்லுக்காடு), ராஜா அப்துல்லா என்ற மேக் ராஜா, மற்றும் ஷேக் தாவூத் ஆகியோராவர். இவர்கள், கோவை அரபிக் கல்லூரி (மெட்ராஸ் அரபிக் கல்லூரி) நிறுவனர் ஜமீல் பாஷாவால் தீவிரவாத சித்தாந்தமான சலஃபி-ஜிஹாதி கொள்கைகளை ஏற்று, இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணியில் ஈடுபட்டதாக NIA தெரிவித்துள்ளது.

அரபி மொழி வகுப்புகள் என்ற பெயரில், சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற தளங்கள் மூலம் இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி தூண்டியதாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், இந்த வழக்கில், ஜமீல் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளான இஷ்ரத், சையத் அப்துர் ரஹ்மான், மற்றும் முகமது ஹுசைன் ஆகியோர் முன்னரே கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.

NIA-யின் விசாரணையில், இவர்கள் கிலாஃபத் சித்தாந்தத்தை பரப்பி, இந்தியாவின் ஜனநாயக அரசை அகற்றி இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கு ஆயுத போராட்டம் மற்றும் ஜிஹாத் மூலம் தூண்டியதாக தெரியவந்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள், 2022-ல் ஜமேஷா முபீன் என்ற தற்கொலை குண்டுதாரியால் கோவையில் நடத்தப்பட்ட வாகன குண்டு வெடிப்புக்கு வழிவகுத்ததாக NIA கூறுகிறது. NIA, இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது, மேலும் தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.