தொந்தரவு இல்லாத நெடுஞ்சாலை போக்குவரத்திற்காக தனியார் வாகனங்களுக்கு ₹3,000க்கு ஆண்டு FASTag பாஸ்களை விநியோகிக்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “இந்த வருடாந்திர பாஸ் ஒரு வருடம் அல்லது 200 பயணங்களுக்கு செல்லுபடியாகும்” என்றார். இது வணிக நோக்கமற்ற வாகனங்களுக்கு மட்டுமே விநியோகிக்கப்படும். “இதில் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் அடங்கும்,” என்று அவர் கூறினார்.
“இந்த வருடாந்திர பாஸ் மூலம், நாடு முழுவதும் எந்த நெடுஞ்சாலையிலும் சுதந்திரமாக பயணிக்கலாம்.” புதிய பாஸ் பெற அல்லது புதுப்பிக்கும் வசதி விரைவில் ராஜ்மார்க் யாத்ரா செயலியில் கிடைக்கும். மேலும், இது NHAI மற்றும் MoRTH வலைத்தளங்களிலும் பெறலாம்.
இதன் மூலம் சுங்கச்சாவடிகள் மற்றும் சுங்கக் கட்டணத்தை எளிமைப்படுத்த என்ற நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதுடன் சுங்கச்சாவடி அதிகாரிகளுடனான தேவையற்ற சச்சரவுகளையும் தவிர்க்கும். வருடாந்திர பாஸ் மூலம் போக்குவரத்து இன்னும் வேகமாக இருக்கும். “தனியார் வாகன உரிமையாளர்களுக்கு வசதியான அனுபவம் இருக்கும்” என்று கட்கரி கூறினார்.