சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கி, உயர்நீதிமன்ற உத்தரவினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏடிஜிபி ஜெயராம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்ய காவல்துறை தரப்பில் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவரை அரசு பணியிடை நீக்கம் செய்து உள்ளது.
தமிழக ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தொடா்பு இருப்பதாக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவின்பேரில் தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டாா். திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒழுங்கு நடவடிக்கை குற்ற வழக்குகளில் சிக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமான நடைமுறையாகும்.
இந்த நிலையில், ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து, குற்றமற்றவா் என நிரூபிக்கும் வரை ஜெயராம் மீதான பணியிடை நீக்க நடவடிக்கை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.