திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி ஆஜரானார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, நீதிமன்றம் அவரது ஜாமின் மனு விசாரணையின்போது,  ஜெகன்மூர்த்தி மற்றும் காவல் ஆய்வாளரை நேரில் ஆஜராக உத்தர விட்டதுடன், ஜெகன் மூர்த்திக்கு ஆதரவாக செயல்பட்ட ஏடிஜிபி செயராமை கைது செய்ய உத்தரவிட்டதுடன், ஜெகன்மூர்த்திக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியது. மேலும், காவல்துறை விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும், என்றும், வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என் உத்தரவிட்டு  உள்ளது.

இதையடுத்து இன்று காலை காவல்துறை விசாரணைக்காக திருவள்ளூர் திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். இதனை அடுத்து பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது.

மேலும், காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக கே.வி. குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர். பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவாக உள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையே பூவை ஜெகன் மூர்த்தி முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்தமனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், இதுவரை கடத்தல் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் காவல் துறை ஏடிஜிபி ஜெயராம்-க்கு தொடர்புள்ளது. பணம் கைமாறியுள்ளது. ஏடிஜிபி-க்கு தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும். வழக்கில் ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளது. போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மதியம் 2.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தர விட்டார். நீதிமன்ற உத்தரவின் படி, முதலில் நீதிமன்றத்தில் ஏடிஜிபி ஜெயராம் ஆஜரானார். எம்.எல்.ஏ ஜெகன் மூர்த்தி வராததால் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் பூவை ஜெகன் மூர்த்திக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து மாலை 4 மணிக்கு நீதிமன்றத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜரானார். அப்போது, ஜெகன் மூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல் துறை உள்நோக்கத்துடன் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. எந்த தவறும் எம்.எல்.ஏ செய்யவில்லை. அதனால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், ஆள் கடத்தல் விவகாரத்தில் அரசு வாகனத்தை பயன்படுத்தியதற்காக ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், எம்எல்ஏ கட்டபஞ்சாயத்து நடத்தக் கூடாது. மக்கள் ஒட்டு போட்டு தேர்வு செய்கிறார்கள். அந்த மக்களுக்கு சேவை செய்யாமல் இருந்தால் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். காவல்துறை விசாரணையை எதிர்கொள்ள ஏன் பயம்? தொண்டர்கள் இல்லாமல் செல்ல ஏன் தயங்குகிறீர்கள்? தவறான காரியம் செய்து விட்டு 1 லட்சம் பேருடன் நீதிமன்றம் வந்தாலும், விடமாட்டேன்.

ஆள் கடத்தல் வழக்கில் ஜெகன் மூர்த்தி காவல் துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஏடிஜிபியை கைது செய்ய காவல் துறைக்கு எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்த காவல்துறையினர், அவர் புழல் மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

,இதையடுத்து ஏ.டி.ஜி.பி. ஜெயராமை சஸ்பெண்ட் செய்யுமாறு தமிழக அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. அதே நேரத்தில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கைதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.